இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 கடற்படை கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இன்று 3 கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் கடல்சார் வலிமை மற்றும் பாதுகாப்புத் திறன்களை எடுத்துக்காட்டும் வகையில், உள்நாட்டிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரே என்கிற 3 கடற்படை கப்பல்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கொல்கத்தாவில் உள்ள ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகையில், “கடல்சார் சக்தியின் முக்கியத்துவத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. கடல்சார் சக்தியின்றி எந்த நாடும் வல்லரசாக முடியாது. பாதுகாப்பு, செழிப்பு மற்றும் வளர்ச்சியுடன் கடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஐஎன்எஸ் விக்ராந் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த போது இந்தியாவின் கடல்சர் தன்னிறைவை உலகிற்கு அறிவித்தோம். இன்று, அர்ப்பணிக்கப்பட்ட 3 கப்பல்கள் அந்தப் பயணத்திற்கு வேகத்தைக் கூட்டியுள்ளன.
Advertisement
Advertisement
சர்வதேச பாதுகாப்புத் துறையில் இனி வாங்குமிடத்தில் இல்லாமல் ஒரு உற்பத்தியாளராக இந்தியா இருக்கும். நாம் ஒரு உற்பத்தியாளராக மாறும்போது முடிவெடுப்பவராக நாம் இருப்போம்.
சமீப ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது 45 கடற்படைக் கப்பல் தளங்கள் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஐஎன்எஸ் துனகிரி
ஜி.ஆர்.எஸ்.இ. நிறுவனத்தால் ப்ராஜெக்ட் 17ஏ மூலம் தயாரிக்கப்பட்ட, மறைமுகத் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2-வது கப்பலுமான ஐஎன்எஸ் துனகிரி, பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் தரை- வான் ஏவுகணைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட போர் மேலாண்மை கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் அக்ரே
அர்னாலா வகை நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்புப் போர் திட்டத்தின் கீழ் 5-வது கப்பலாக உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் அக்ரே, கடலோரப் பகுதிகளில் செயல்பட இலகுரக ஆயுதங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட சோனார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் சன்ஷோதக்
சந்தாயக் - வகுப்பு ஆய்வுக் கப்பல் திட்டத்தின் 4-வது கப்பலான ஐஎன்எஸ் சன்ஷோதக், தானியங்கி மற்றும் தொலைவிலிருந்து இயக்கப்படும் கருவிகளைக் கொண்டு கடல் பகுதி வரைபடம், நீரியல் ஆய்வுகள் மற்றும் கடல் பயண வரைபடமிடல் போன்றவற்றை மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 3 கப்பல்களும் தரைப்படைப் போர், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு ஆகியவற்றில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தி, பாதுகாப்புத் துறையின் உற்பத்தித் திறன் மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான நாட்டின் கவனத்தையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister Modi dedicated three indigenously built naval ships to the nation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.