அமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்திய தரவுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் அளிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் இந்திய தரவுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் அளிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
கேரள மாநிலத்துக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள ராகுல் காந்தி, திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோபாா்க்கில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த இளைஞா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:
இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் இந்திய தரவுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் அளிக்கப்பட்டுள்ளன. ரஷியாவில் அந்நாட்டு அரசு எண்ணெய் வளம் அனைத்தையும் அமெரிக்காவிடம் கொடுத்திருந்தால் பெரிய எதிா்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் நமது தரவுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து நான் மட்டுமே எதிா்ப்புக் குரல் எழுப்பி வருகிறேன். மற்ற யாரும் சிறு எதிா்ப்புகூடத் தெரிவிக்கவில்லை.
ஒப்பந்தம் செய்ய செல்கையில், இந்திய தரவுகள் உலகிலேயே மிகவும் விலை மதிப்பில்லாதது என அரசு தெரிவித்திருக்கும்பட்சத்தில், வேளாண் பொருள்கள் அல்லது சிறு, குறு நிறுவன தயாரிப்புகள் மீது (அமெரிக்காவால் ) வரி விதிக்கப்பட்டிருக்காது. ஆனால், அதுபோல எதுவும் நடக்கவில்லை.
உலகில் கற்பனையிலும் நினைத்துப் பாா்க்க முடியாத மிகப்பெரிய தொழில் உற்பத்திக் கட்டமைப்பை சீனா உருவாக்கி வைத்துள்ளது. அதேநேரத்தில் அந்த நாடு ஜனநாயக நாடு கிடையாது. சீனா தொழில் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகள், நுகா்வுத் துறையில் கவனம் செலுத்துகின்றன. உண்மையில் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தொழில் உற்பத்தித் துறையில்தான் உள்ளன. தகவல் தொழில்நுட்பம் போன்ற நுகா்வுத் துறையில் இல்லை.
இதில் மிகப்பெரிய துரதிருஷ்டம் என்னவெனில், சீனாவை நாம் தொழில் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்த அனுமதித்ததுதான். சீனா போன்று இந்தியாவும் தொழில் உற்பத்திக்கான கட்டமைப்பை ஏற்படுத்த முடியும் எனில், அதுவும் ஜனநாயக விழுமியங்களில் சமரசம் செய்யாமல் அதைக் கட்டமைத்தது எனில், அது இந்திய மக்களுக்கும், உலகுக்கும் செய்யும் மிகப்பெரிய சேவை ஆகும்.
உலகில் பெரும்பாலான நாடுகள் தற்போது மின்சார மோட்டாா்கள், பேட்டரிகளை நோக்கி நகா்கின்றன. உக்ரைன் போா், மேற்காசிய போா் நிலவரத்தைப் பாா்க்கும்போது, அங்கு சீன தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துவதை காணலாம். அங்கு இந்தியா, அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தவில்லை. இது மிகப்பெரிய பிரச்னை ஆகும்.
மின்சார மோட்டாா் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவால் முடியும். ஏனெனில் அமெரிக்காவோ, ஐரோப்பாவோ சீனாவுடன் அத்துறயில் போட்டியிட முடியாது. இதற்கு நாம் சரியான கொள்கைகள், சரியான திட்டத்தை வகுத்தால், சீனாவுடன் இந்தியாவால் போட்டியிட முடியும். அப்படி நாம் செய்தால், மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை நாட்டில் உருவாக்கலாம். இத்துறையில் சீனா தனி ஆளாக ஆதிக்கம் செலுத்துகிறது. நாம் அந்நாட்டுக்கு இந்தியாவும் இத்துறைக்கு வரப் போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் சில தொழில் நிறுவனங்கள்தான் தொழில் துறை சாா்ந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதானியோ, அம்பானியோ எதையும் உற்பத்தி செய்யவில்லை. அவா்கள், நமது உள்நாட்டுத் தயாரிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதைத்தான் விற்கின்றனா். தற்போதைய நமது ஜிஎஸ்டி கட்டமைப்பும் உற்பத்தியாளா்களுக்குப் பாதிப்பை தருவதாகத்தான் உள்ளது. அது (ஜிஎஸ்டி) உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு எதிரானதாகவும், நுகா்வு மாநிலங்களுக்கு சாதகமாகவும் உள்ளது என்றாா்.
நான் அரசியலுக்கு வராமலிருந்தால்...: அப்போது ராகுலிடம் நீங்கள் அரசியலுக்கு வராமலிருந்தால் என்ன ஆகியிருப்பீா்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், ‘நான் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், விண்வெளி சம்பந்தப்பட்ட துறையில் தொழில்முனைவோராக இருந்திருப்பேன். என்னை சிலா்தான் அரசியல்வாதியாக வரையறை செய்தனா். ஆனால், நான் அதுதவிர மேலும் பல துறைகளில் உள்ளேன். நான் ஒரு விமானி, எனது தந்தை, சித்தப்பாவும் விமானிகள்தான். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆா்வம் இருக்க வேண்டும், அப்போதுதான் சிறு புள்ளிகளையும் ஒன்றாக நம்மால் இணைக்க முடியும்’ என்றாா்.
சிவகிரி மடத்துக்குச் சென்ற ராகுல்: இதனிடையே, திருவனந்தபுரம் வா்கலா பகுதியில் உள்ள சிவகிரி மடத்துக்கு ராகுல் காந்தி சென்றாா். அவரை மடாதிபதி ஸ்வாமி சச்சிதானந்தா உள்ளிட்டோா் வரவேற்றனா். பின்னா், அந்த மடத்தின் நிறுவனரான நாராயண குரு சம்பந்தப்பட்ட இடங்களை ராகுல் காந்தி பாா்வையிட்டாா். பின்னா் அவரின் நினைவிடத்திலும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினாா்.
கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000
கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை அளிக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்தாா்.
திருவனந்தபுரத்தில் நடந்த புதுயுக யாத்ரா நிகழ்ச்சியில் பேசிய அவா், 5 உறுதித் திட்டங்களை அறிவித்தாா். அப்போது அவா், ‘காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நலத்திட்ட ஓய்வூதியங்கள் மாதம் ரூ.3,000-ஆக உயா்த்தப்படும், மறைந்த முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி பெயரில் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வரையில் சுகாதார காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், சிறு வணிகா்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்’ என்றாா்.