தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம்: ரேபரேலியில் ராகுல்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி ராகுல்காந்தி கூறுவது..
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி தெரிவித்தார்.
ரேபரேலியில் ராகுலின் இரண்டாவது நாள் பயணத்தின் முக்கியத்துவமாக, புரட்சியாளர் வீர பாசியின் நினைவாக நடைபெற்ற பகுஜன் ஸ்வபிமான் கூட்டத்தில் உரையாற்றினார்.
வீர பாசி மற்றும் டாக்டர் அம்பேத்கரை நாம் நினைவுகூருகிறோம். ஆனால், அவர்கள் முன்னிறுத்திய சித்தாந்தம் முறையாகப் பாதுகாக்கப்படுவதில்லை என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டது. ஏனெனில் நம் கண் முன்னதாக அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அரசியலமைப்புச் சட்டம் என்பது சாதாரண ஆவணம் அல்ல, அது அம்பேத்கர், வீர பாசி, மகாத்மா காந்தி ஆகியோரின் சித்தாந்தத்தையும், கேரளத்தின் நாராயண குரு மற்றும் கர்நாடகத்தின் பசவண்ணா போன்ற பல சீர்திருத்தவாதிகளின் பங்களிப்புகளையும் உள்ளடக்கிய ஆவணம்.
புத்தர், குருநானக் மற்றும் கபீர் ஆகியோரையும் குறிப்பிட்ட ராகுல் காந்தி அவர்களின் குரல்களும் அரசியலமைப்புச் சட்டத்தில் எதிரொலிப்பதாகக் கூறினார்.
மக்கள் சிலைகளுக்கு முன்னால் தலைவணங்கிப் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அதே வேளையில், அரசியலமைப்பின் மீதும் அது பிரதிபலிக்கும் சித்தாந்தத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படும்போது மௌனம் சாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, எந்தவொரு சாதிக்கோ, தனிநபருக்கோ, கோடீஸ்வரருக்கோ சொந்தமானது அல்ல.
விலைவாசி கடுமையாக உயரக்கூடும் என எச்சரிக்கும் வகையில், எரிபொருள் நுகர்வு, தங்கம் வாங்குதல், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் விடுத்திருந்த வேண்டுகோளை ராகுல் சுட்டிக்காட்டினார்.
மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்த நிலையில், பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அதானி, அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் நலன்களுக்கு, நாட்டின் நலனைப் பலியிட்டு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அம்பேத்கர், வீர பாசி மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கைகள் பாதுகாக்கப்படும் பட்சத்தில்தான், அவர்களை நினைவுகூருவது அர்த்தமுள்ளதாக அமையும். அவர்களின் சிலைகளுக்கு முன்னால் கைகூப்பி வணங்குவது மட்டும் போதுமானதல்ல. வெளியே சென்று அவர்களின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டால், அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.
இந்தியாவின் சமத்துவம் மற்றும் நீதி சார்ந்த விழுமியங்கள் கூட்டாகப் பாதுகாக்கப்பட வேண்டும். 21-ஆம் நூற்றாண்டின் வீர பாசிகள், அம்பேத்கர்கள், காந்திகள் உங்கள் மத்தியிலிருந்தே தோன்றுவார்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்து வரப்போவதில்லை இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டு நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதிக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி நேற்று கீரான் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lok Sabha Leader of Opposition Rahul Gandhi on Wednesday said the Constitution is under attack and called it a document that represents the voices of Dr B R Ambedkar and Mahatma Gandhi that must be protected.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.