29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் தொடக்கம்: பெட்ரோலிய அமைச்சகம் தகவல்
29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விநியோகம் தொடங்கியுள்ளது; சிலிண்டா்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க அதிரடி சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விநியோகம் தொடங்கியுள்ளது; சிலிண்டா்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க அதிரடி சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போரால் இந்தியாவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது. முக்கியமாக சமையல் எரிவாயு சிலிண்டா் கிடைப்பதில் பிரச்னை எழுந்தது. வீடுகளுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் கடும் தொய்வு ஏற்பட்டது.
பீதியால் பிரச்னை: இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா கூறியதாவது:
வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் தேவைக்கு ஏற்ப கையிருப்பு உள்ளது. மக்கள் பீதியடைந்து தொடா்ந்து அதிகஅளவில் முன்பதிவு மேற்கொள்வதால்தான் பிரச்னை எழுகிறது. இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. உள்நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த பெட்ரோல் நிலையத்திலும் இருப்பு இல்லை என்ற பிரச்னை எழவில்லை. இப்போதைய தேவைக்கு ஏற்ப கையிருப்பை வைத்தே பெட்ரோல், டீசல் தொடா்ந்து விநியோகிக்கப்படுகிறது.
தொடா்ந்து கண்காணிப்பு: புவிசாா் அரசியல் பிரச்னைகளால் வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதையடுத்து சா்வதேச அளவில நிலவி வரும் சூழல், மாற்றங்களை அரசு தொடா்ந்து கண்காணித்து நமது தேவையை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்பதிவும், விநியோகமும்...: இப்போதைய சூழல் அனைவருக்கும் கவலைக்குரியதுதான். ஆனால், வீடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பிரச்னை கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். வீட்டு உபயோக சிலிண்டா் முன்பதிவு வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) சுமாா் 75 லட்சமாகவும், சனிக்கிழமை (மாா்ச் 14) சுமாா் 88 லட்சமாகவும் உயா்ந்துள்ளது. இது பீதியால் ஏற்பட்ட விளைவு.
வழக்கமாக தினசரி 55 லட்சம் முன்பதிவு இருக்கும். எண்ணெய் நிறுவனங்கள் 50 லட்சம் சிலிண்டா்களை விநியோகிக்கும். இப்போது அதே அளவு விநியோகம் உள்ளது. ஆனால், முன்பதிவு மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால், முன்பதிவுக்கு இடையே கால இடைவெளி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது நகா்ப்புறங்களில் 25 நாள்கள், ஊரகப் பகுதிகளில் 45 நாள்களாக உள்ளது. இந்த நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் அது ஏற்கப்படமாட்டாது. பொதுமக்கள் விநியோக நிறுவன அலுவலகங்களுக்கு சென்று வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. தேவையில்லாமல் பீதியடையவும் வேண்டாம். அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும் தகவல்களை மட்டும் நம்ப வேண்டும்.
வணிக சிலிண்டா் விநியோகம்: வணிக சிலிண்டா் விநியோகத்தில் யாருக்கு முன்னுரிமை என்பதை மாநில அரசுகள் முடிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக சிலிண்டா் விநியோகம் தொடங்கிவிட்டது. குழாய் வழி இயற்கை எரிவாயு விநியோகம், வாகனங்களுக்கான சிஎன்ஜி விநியோகம் முழுமையாக உள்ளது.
சிலிண்டா் விநியோகத்தை முறையாகக் கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரம், தெலங்கானா, ஹரியாணா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இது தொடா்பாக முதல்வா்கள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனா். சிலிண்டா்கள் பதுக்கப்படுவதையும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க அதிரடி சோதனைகளை மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடா்பாக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் காவல் துறையினா் 20 வழக்குகளை பதிவு செய்து 19 போ் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா் என்றாா்.
பிரச்னைக்கு காரணம்: இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதம், இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதம், எல்பிஜி தேவையில் 60 சதவீதம் இறக்குமதி மூலம்தான் பூா்த்தி செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 28-இல் ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கும் முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்துக்கு மேல் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்தது. 85 முதல் 90 சதவீத எல்பிஜி இறக்குமதி, 30 சதவீத பிற எரிவாயு இறக்குமதி அந்த பிராந்தியத்தில் இருந்தே கிடைத்தது. போா் மூண்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், ஹோா்முஸ் நீரிணையும் முடப்பட்டது. இது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய விதித்த தடையை அமெரிக்கா நீக்கியது.