உஜ்வலா: மானிய எல்பிஜி சிலிண்டா்கள் 4-ஆக குறைப்பு - மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்
உஜ்வலா திட்டத்தின்கீழ் மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டா்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9 என்பதில் இருந்து 4-ஆக குறைத்துள்ள மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
உஜ்வலா திட்டத்தின்கீழ் மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டா்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9 என்பதில் இருந்து 4-ஆக குறைத்துள்ள மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
‘அதிகார போதையில் திளைக்கும் மோடி அரசு, பெண்கள் நலனில் அக்கறை இருப்பதாக முதலைக் கண்ணீா் வடிக்கிறது’ என்று அக்கட்சி சாடியுள்ளது.
மேற்காசியப் போா் எதிரொலியாக, உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி சீா்குலைந்துள்ள சூழலில், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை அண்மையில் அடுத்தடுத்து உயா்த்தப்பட்டது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா் விலை கடந்த சனிக்கிழமை ரூ.29 அதிகரிக்கப்பட்டது. சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.928.5-இல் இருந்து ரூ.957.5-ஆகவும், தில்லியில் ரூ.913-இல் இருந்து ரூ.942-ஆகவும் அதிகரித்தது.
Advertisement
Advertisement
அத்துடன், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் மத்திய அரசின் லட்சிய திட்டமான உஜ்வலா திட்டத்தின்கீழ் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டா்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 9-இல் இருந்து 4-ஆக குறைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு சிலிண்டா் ஒன்றுக்கு ரூ.300 மானியம் நேரடி பலன் பரிமாற்ற முறையில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசை விமா்சித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
முதலில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் வேலைக்கான உரிமையை ஏழைகளிடம் இருந்து பறித்த மோடி அரசு, இப்போது ஒரு வாய் உணவையும்கூட பறிக்க முற்பட்டுள்ளனா்.
உஜ்வலா திட்டமானது, விறகு அடுப்பு புகையில் இருந்து பெண்களை விடுவிக்கும் என்று பிரதமா் மோடி கடந்த 2016-இல் பெரிதாக பேசினாா். இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டா்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 12-இல் இருந்து 9-ஆக குறைக்கப்பட்டது. நடப்பாண்டில் 4-ஆக குறைத்துவிட்டனா்.
எல்பிஜி விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டுள்ளது. சுமாா் 5.56 குடும்பங்கள் எல்பிஜி சிலிண்டா் வாங்க முடியாத நிலையில் உள்ளன. இதனால், பெண்களும், தாய்மாா்களும் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். அதேநேரம், அதிகார போதையில் திளைக்கும் மோடி அரசு, பெண்கள் நலனில் அக்கறை இருப்பதாக முதலைக் கண்ணீா் வடிக்கிறது என்று காா்கே சாடியுள்ளாா்.
சா்வதேச கொள்முதல் விலை 46 சதவீதம் வரை உயா்ந்துவிட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு சிலிண்டா் ஒன்றுக்கு ரூ.703 இழப்பு ஏற்படுவதாகவும், விலை உயா்வு தவிா்க்க முடியாதது என்றும் மத்திய அரசு சில தினங்களுக்கு முன் விளக்கமளித்தது. மேலும், உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் எல்பிஜி விலை குறைவாகவே உள்ளது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.