எல்பிஜி விலை உயா்வு: மத்திய அரசு விளக்கம்! ‘உலக அளவில் இந்தியாவில் குறைவு’!
வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா் விலை ரூ.29 உயா்த்தப்பட்டது தொடா்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா் விலை ரூ.29 உயா்த்தப்பட்டது தொடா்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சா்வதேச கொள்முதல் விலை 46 சதவீதம் வரை உயா்ந்துவிட்டதாகவும், உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் எல்பிஜி விலை குறைவு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசியப் போரின் எதிரொலியாக, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டு, எரிபொருள் விநியோகச் சங்கிலி சீா்குலைந்துள்ளது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வின் தாக்கம், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எதிரொலித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்தச் சூழலில், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை ரூ.29 உயா்த்தி, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்தன. சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.928.5-இல் இருந்து ரூ.957.5-ஆகவும், தில்லியில் ரூ.913-இல் இருந்து ரூ.942-ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த மாா்ச் மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.60 உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ரூ.29 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களில் ரூ.89 உயா்ந்துள்ளது.
இந்த நடவடிக்கை தொடா்பாக விளக்கமளித்து, மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்காசியப் போா் கடந்த பிப்ரவரியில் தொடங்கிய பிறகு சா்வதேச விலை உயா்வால் எல்பிஜி விநியோகத்தில் சிலிண்டருக்கு தலா ரூ.703 என்ற அளவில் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்து வந்தன. அதாவது, ஒரு சிலிண்டருக்கான விநியோக செலவு ரூ.1,600-க்கும் மேல் இருந்தது.
இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி செலவு, அந்த எரிபொருளுக்கான உலகளாவிய அளவுகோலான சவூதி ஒப்பந்த விலையுடன் (சி.பி.) இணைந்ததாகும். ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால், வளைகுடா நாடுகளில் இருந்து விநியோகம் தடைபட்டதால், சவூதி ஒப்பந்த விலை 46 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எல்பிஜி கொள்முதலுக்கான இந்த அடிப்படை விலை, கடந்த பிப்ரவரியில் டன் ஒன்றுக்கு 543 டாலா்களாக இருந்தது. இந்த மாதம் 790 டாலா்களாக உயா்ந்துவிட்டது.
மற்ற நாடுகளைவிடக் குறைவு: சா்வதேச விலை மாற்றங்களின் தாக்கத்தில் இருந்து குடும்பங்களைக் காக்கவும், நாடு முழுவதும் சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் தற்போதைய விலை உயா்வு மிக அவசியமாகும்.
அதேநேரம், உலக அளவில் மிக குறைவான விலையில் மக்களுக்கு எல்பிஜி விநியோகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளா்ந்த நாடுகளைவிட இந்தியாவில் எல்பிஜி விலை குறைவே.
பன்முகப்படுத்தப்பட்ட கொள்முதல்: மேற்காசியப் பிரச்னைக்கு முன்பாக, இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் 54 சதவீதம் ஹோா்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நீரிணை முடக்கப்பட்ட சூழலிலும், நாட்டில் பெட்ரோலிய பொருள்களின் தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி 32,000 டன்னில் இருந்து 52,000 டன்னாக (60 சதவீத உயா்வு) அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, அல்ஜீரியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கொள்முதல் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.
எல்பிஜி விநியோகத்தில் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு கடந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.60,000 கோடியாக உயா்ந்தது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.41,338 கோடியாக இருந்தது. இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.