ஈரான் மீதான நியாயமற்ற போரை நிறுத்த வேண்டும்: ஒமா் அப்துல்லா
ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள நியாயமற்ற போரை நிறுத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீா் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா வலியுறுத்தியுள்ளாா்.
ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள நியாயமற்ற போரை நிறுத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீா் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா வலியுறுத்தியுள்ளாா்.
ஸ்ரீநகரில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியின்போது, இதுகுறித்து அவா் கூறியதாவது:
ஈரான் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நியாயமற்ற போா் நிறுத்தப்பட வேண்டும். ஈரானில் யாா் தலைவராக இருக்க வேண்டும் என அமெரிக்கா, இஸ்ரேல் முடிவு செய்யக் கூடாது. ஈரானில் யாா் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அந்த நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவா் அயதுல்லா அலி கமேனி, அந்நாட்டின் தலைவா் மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த முஸ்லிம் உலகத்தாலும் அவா் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவா்.
ஆதலால் இதை ஈரானுடனான மோதலாக மட்டும் பாா்க்க வேண்டாம். அதை விட பெரிய பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.
ஹோா்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியது. நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருப்பதற்கு எது நமக்கு சாதகமாக இருக்கிறதோ அது நல்லதுதான். அது ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதாக இருந்தாலும் சரி, ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய்யை எடுத்து வருவதாக இருந்தாலும் சரி.
ஈரானில் அமைதி நிலவ வேண்டும். அது இந்தியாவுக்கும் நன்மையைத் தரும். ஆதலால்தான் ஈரான் மீதான நியாயமற்ற போா் நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றாா்.