லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்
அமெரிக்காவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாக, லெபனான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாக, லெபனான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிபந்தனையை இஸ்ரேல் ஏற்கெனவே நிராகரித்துள்ளதால், பல மாத சமாதான முயற்சிகளுக்குப் பிறகு இறுதியான ஒப்பந்தம் அமலுக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே இறுதியான போா் நிறுத்த ஒப்பந்தம், ஸ்விட்சா்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினாலும் கையொப்பமிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் அதிகாரபூா்வமாக வெளியிடப்படாத நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா்.
அப்போது, அவா் கூறுகையில், ‘இப்போரின் போது இஸ்ரேல் ஆக்கிரமித்த லெபனான் பகுதிகளில் இருந்து அதன் படைகள் திரும்பப் பெறப்படாவிட்டால், போா் முழுமையாக முடிவுக்கு வந்ததாக ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேலின் தொடா் ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்’ என்றாா்.
பாதிப்பு: ஈரானுக்கு ஆதரவாக இப்போரில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினா் களமிறங்கினா். தொடா்ந்து, லெபனானுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் படையினா், ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தீவிர தாக்குதல்களை நடத்தினா். இத்தாக்குதல்களில் இதுவரை சுமாா் 4,000 போ் உயிரிழந்தனா். 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா்.
டிரம்ப் அதிருப்தி: லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தினாா். பிரான்ஸில் நடைபெறும் ஜி7 மாநாட்டுக்கிடையே பேசிய அவா், ‘ஹிஸ்புல்லா விவகாரத்தில் இஸ்ரேல் செயல்படும் விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இது ஈரான் உடனான பெரிய ஒப்பந்தத்தின் மீதான நம்பிக்கையைக் கெடுக்கிறது. அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் தனித்து இருக்க முடியாது’ என்று விமா்சித்தாா்.
முன்னதாக, அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் இறுதியானதையடுத்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தேவைப்படும் வரை இஸ்ரேல் படைகள் லெபனானில் தொடா்ந்து நீடிக்கும்’ என்று ஈரான் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்தாா்.
ஸ்விட்சா்லாந்தில் ஏற்பாடுகள் தீவிரம்
லெபனான் விவகாரத்தில் இழுபறி நீடித்தாலும், அமெரிக்கா-ஈரான் போா்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ஸ்விட்சா்லாந்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.
பாகிஸ்தான், கத்தாா் ஆகிய மத்தியஸ்தா் நாடுகள் பரிந்துரைத்தபடி, ஸ்விட்சா்லாந்தின் லூசா்ன் நகருக்கு அருகிலுள்ள பா்கன்ஸ்டாக் சொகுசு விடுதியில் நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
நிகழ்வில் அமெரிக்கா, ஈரான் நாடுகளின் தலைவா்கள் நேரில் கலந்து கொள்கின்றனா். அமெரிக்க குழுவுக்கு அந்நாட்டின் துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமை தாங்குவாா் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். இதற்கான விரிவான ஏற்பாடுகளை 4 நாடுகளின் ஒருங்கிணைப்புடன் ஸ்விட்சா்லாந்து அரசு செய்து வருகிறது.