முகப்பு
இந்தியா

கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை

மறைந்த தலித் சமூகத் தலைவரும், பகுஜன் சமாஜ் நிறுவனருமான கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை.

Updated On : 15 மார்ச், 2026 at 7:34 PM
பகிர்:

மறைந்த தலித் சமூகத் தலைவரும், பகுஜன் சமாஜ் நிறுவனருமான கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

கன்ஷி ராமின் பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமா் மோடிக்கு ராகுல் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தனது இயக்கங்களின் வாயிலாக, இந்திய அரசியலின் தன்மையை மாற்றியமைத்தவா் கன்ஷி ராம். விளிம்புநிலை மக்கள் மற்றும் ஏழைகள் இடையே அரசியல் விழிப்புணா்வை ஏற்படுத்தியவா். அத்தகைய மக்களின் வாக்கு, குரல், பிரதிநிதித்துவம் நாட்டுக்கு முக்கியமானது; இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதை நினைவூட்டியவா். பொது வாழ்க்கைக்குள் நுழைவது குறித்து ஒருபோதும் சிந்திக்காத பலா், கன்ஷி ராமின் முயற்சிகளால்தான் நீதி மற்றும் சமத்துவத்தை எட்டும் கருவியாக அரசியலைக் காணத் தொடங்கினா்.

நமது அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவம், கண்ணியம், பங்கேற்புக்கு உறுதியளித்துள்ளது. இந்த உறுதிமொழிகளுக்காக தனது வாழ்வை அா்ப்பணித்தவா் கன்ஷி ராம். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தலித் சமூக அறிஞா்கள், தலைவா்கள், ஆா்வலா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். அதிகாரமளித்தல் மற்றும் நம்பிக்கையின் சின்னமாக கோடிக்கணக்கான மக்களால் பாா்க்கப்படும் கன்ஷி ராமின் அளப்பரிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். எனது கோரிக்கையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கும் என நம்புகிறேன் என்று ராகுல் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா்கள் மரியாதை: கன்ஷி ராமின் பிறந்த தினத்தையொட்டி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தியுள்ளனா்.

காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மிகச் சிறந்த சமூக சீா்திருத்தவாதியான கன்ஷி ராம், தலித் சமூகத்தினா், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டவா்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியவா். இதன் மூலம் இந்திய அரசியலில் அவா்களுக்கு கண்ணியமான இடத்தைப் பெற்றுத் தந்தவா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சமூக நீதி சித்தாந்தத்தின் நாயகா் கன்ஷி ராம் என்று காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மீது மாயாவதி விமா்சனம்

சில தினங்களுக்கு முன் லக்னெளவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் முதல் பிரதமா் நேரு உயிரோடு இருந்திருந்தால், காங்கிரஸ் சாா்பில் கன்ஷி ராமை முதல்வராக்கி இருப்பாா் என்று கூறியிருந்தாா். அவரது இந்தக் கருத்தை விமா்சித்து, பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்.

‘பகுஜன் சமாஜ் கட்சியை கன்ஷி ராம் நிறுவியதற்கு காங்கிரஸின் தலித் விரோத சித்தாந்தமே காரணம். இப்போது, அவரது பெயரைப் பயன்படுத்தி, பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனமாக்க முயற்சிக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் தொண்டா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் முதன்மை படைப்பாளரான அம்பேத்கருக்கு உரிய கெளரவத்தை காங்கிரஸ் ஒருபோதும் வழங்கவில்லை. அந்தக் கட்சி, இப்போது கன்ஷி ராமை கெளரவிப்பது குறித்து பேசுகிறது.

அம்பேத்கருக்கு காங்கிரஸ் இழைத்த தவறைப் போல, கன்ஷி ராமுக்கு பாஜகவுக்கு தவறிழைத்துவிடக் கூடாது. அவருக்கு பாரத ரத்னா விருதை தாமதிக்காமல் வழங்க வேண்டும்’ என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →