முகப்பு
இந்தியா

பெண்களுக்கு மாதம் ரூ. 3,000.. இது அஸ்ஸாம் பாஜகவின் வாக்குறுதி!

அஸ்ஸாம் பாஜகவின் வாக்குறுதி பட்டியலை முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று வெளியிட்டுள்ளார்.

Updated On : 31 மார்ச், 2026 at 11:28 AM
முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா - DPS
பகிர்:

அஸ்ஸாமில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும், சீரான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் 31 வாக்குறுதிகளின் பட்டியலை முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பேசுகையில்,

அஸ்ஸாம் மாநிலத்தை ஒளிமயமான மாநிலமாக உருவாக்க விரும்புகிறோம். பிறரைச் சார்ந்திருக்கும் மாநிலமாக இருக்க விரும்பவில்லை. நாட்டின் தேசக் கட்டமைப்பில் நாங்களும் பங்காற்ற விரும்புகிறோம்.

ஆறாவது அட்டவணை மற்றும் பழங்குடியினப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டு, அஸ்ஸாமில் சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். லவ் ஜிஹாத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். வெள்ளம் இல்லாத அஸ்ஸாம் மாநிலத்தை உருவாக்க முயற்சிப்போம், இதற்காக முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ. 18,000 கோடியைச் செலவிடுவோம்.

லக்‌பதி தீதி திட்டத்தின் கீழ் 40 லட்சம் பெண்களைச் செல்வந்தர்களாக மாற்றும் நோக்கத்துடன், ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 25,000 வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை நாங்கள் உருவாக்குவோம்.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரியை உருவாக்குவோம், அருணோதய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை ரூ. 1,250-லிருந்து ரூ. 3,000 ஆக உயர்த்த நாங்கள் முயல்வோம்.

இந்த நிகழ்வில் முதல்வருடன் இணைந்து, மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் சர்பானந்த சோனோவால், அத்துடன் மாநில பாஜக தலைவர் திலிப் சைகியா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாநில பாஜக தலைவர் திலிப் சைகியா கூறுகையில்,

பாதுகாப்பான மற்றும் வளர்ந்த அஸ்ஸாம் மாநிலத்தை உருவாக்குவதே பாஜகவின் குறிக்கோள். 2026 தேர்தல் அஸ்ஸாம் மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். பாதுகாப்பான அஸ்ஸாமை உருவாக்கும் நோக்கத்துடன் பாஜக இத்தேர்தலில் போட்டியிடுகிறது. இத்தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். பாதுகாப்பான, வளர்ந்த அஸ்ஸாமை உருவாக்குவதே எங்களின் நோக்கம். தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2.45 லட்சம் ஆலோசனைகளை நாங்கள் பெற்றோம் என்று அவர் கூறினார்.

மொத்தமுள்ள126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

126 இடங்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டமன்றத்தைக் கைப்பற்றுவதற்காக, தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் பாஜகவானது, அசோம் கண பரிஷத் (ஏஜிபி) மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியானது தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது; அதேவேளையில், ஆளும் கட்சியைத் தோற்கடித்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதைக் காங்கிரஸ் கட்சி தனது இலக்காகக் கொண்டுள்ளது.

The Bharatiya Janata Party (BJP) on Tuesday released its manifesto for the 2026 Assam Assembly elections, promising a Uniform Civil Code and increasing the monthly direct bank transfer under the Orunodoi scheme to Rs 3,000 for women.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.