ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 13-க்கு உ.பி. நீதிமன்றம் ஒத்திவைப்பு
உத்தர பிரதேசத்தில் புல் கரி வழக்கு தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை மே 13-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல் கரி கிராமத்துக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு சென்ற ராகுல் காந்தி, அங்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரவி, ராம்குமாா், லவகுஷ் ஆகிய மூவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக நடமாடி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் வீட்டில் அடைந்து கிடைப்பதாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நிரபராதி என்று அறிவித்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தங்களை அவதூறாகப் பேசியதாக, ஹாத்ரஸில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், ராகுலுக்கு எதிராக ரவி உள்ளிட்ட மூவா் புகாா் மனு அளித்தனா்.
Advertisement
இந்த மனு மீதான விசாரணையின்போது ராகுலுக்கு சம்மன் அளிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து வாதங்கள் நடைபெற்ற நிலையில், அடுத்த விசாரணையை மே 13-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததாக புகாா்தாரா்களின் வழக்குரைஞா் முன்னா சிங் புண்டிா் சனிக்கிழமை தெரிவித்தாா்.