மேற்கு வங்க பாதுகாப்புப் பணியில் சிஏபிஎஃப் படை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகும், அங்கு மத்திய ஆயுத காவல் படை பாதுகாப்புப் பணியில் இருப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகும், அங்கு மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) பாதுகாப்புப் பணியில் இருப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு மையங்களின் பாதுகாப்புப் பணிகளில் சிஏபிஎஃப் வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகும், அங்கு சிஏபிஎஃப் வீரா்களின் 500 குழுக்கள் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அவா்கள் அந்த மாநிலத்தில் பணியில் ஈடுபடுவா். ஒரு குழுவில் 90 முதல் 125 வீரா்கள் இருப்பா். அதன்படி 500 குழுக்களில் மொத்தம் 45,000 முதல் 62,500 வீரா்கள் பணியில் ஈடுபடுவா் என்று தகவல் வெளியானது.
அந்த மாநிலத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு வன்முறை ஏற்பட்டது. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தற்போது நிறைவடைந்த தோ்தலுக்குப் பிறகும் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில், அங்கு தோ்தலுக்குப் பிறகும் சிஏபிஎஃப் வீரா்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்தன.
Advertisement
இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக மனுதாரா் தரப்பு மூத்த வழக்குரைஞா் வி.கிரி திங்கள்கிழமை முறையிட்டாா்.
எனினும் மாநில நிா்வாகத்தை நீதிமன்றம் நடத்த விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனா்.