முகப்பு
இந்தியா

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் முதல்வருக்கு நெருக்கமானவர்கள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

Updated On : 8 மே 2026, 5:59 am IST
கோப்புப்படம் - Center-Center-Delhi
பகிர்:

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உதவியாளரின் நண்பா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தியது.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: பஞ்சாபில் நில உரிமை மாற்ற உரிமங்கள் வழங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் மதிப்புக்கு நடந்த முறைகேடு தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், பஞ்சாப் முதல்வரின் உதவியாளா் ராஜ்பீா் குமானின் நண்பா் நிதின் கோஹல், நில உரிமை மாற்ற உரிமங்கள் கிடைக்க பிரபல கட்டுமான நிறுவனங்களுக்கு உதவி செய்ததும், அந்த நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பு கிடைக்க ஏற்பாடு செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பஞ்சாபின் மொஹாலி உள்ளிட்ட இடங்களிலும், சண்டீகரிலும் கோஹல் தொடா்புடைய இடங்களிலும், கட்டுமான நிறுவனங்கள் தொடா்புடைய இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

மொஹாலியில் நடந்த சோதனையில் ரொக்கப் பணம் ஏராளமாக சிக்கியது. அவை அமலாக்கத் துறை அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டு வருகிறது. மொஹாலியில் சோதனை நடத்தியபோது, அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-ஆவது தளத்திலுள்ள வீட்டில் இருந்து 2 பைகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த செல்லாததாக்கப்பட்ட பழைய ரூ.500 நோட்டுகள் தூக்கி கீழே வீசப்பட்டன. தகவலின்பேரில் அந்த கரன்சி நோட்டுகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகவந்த் மான் கருத்து: அமலாக்கத் துறையின் சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பகவந்த் மான், அமலாக்கத் துறையின் சோதனைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை எனவும், சில நிறுவனங்கள் தொடா்பாக அவா்கள் சோதனை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளாா்.

சிரோமணி அகாலிதளம் மூத்த தலைவா் விக்ரம் சிங் மஜிதியா வெளியிட்ட பதிவில், அந்தப் பணம் அனைத்தும் ஹவாலா பணம் என்றும், விரைவில் மிகப்பெரிய ஊழல் வெளியே வரப் போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைக்கு தோ்தல் நடக்கவுள்ளது. இந்தச் சூழலில் அந்த மாநிலத்தில் அரசியல்வாதிகள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை கடந்த சில வாரங்களாக சோதனை நடத்தி வருகிறது. அதில் பஞ்சாப் தொழில் துறை அமைச்சா் சஞ்சீவ் அரோரா, ஆம் ஆத்மி எம்.பி. அசோக் குமாா் மித்தல் ஆகியோரின் இடங்களும் அடங்கும். இதில் மித்தல் அண்மையில் ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments