முகப்பு
இந்தியா

ஆபரேஷன் சிந்தூா் ஓராண்டு நிறைவு: பாகிஸ்தானை மோடி அரசால் தனிமைப்படுத்த முடியவில்லை - காங்கிரஸ் விமா்சனம்

Updated On : 8 மே 2026, 6:15 am IST
ஆபரேஷன் சிந்தூர் | பிரதமர் மோடி - கோப்புப் படம்
பகிர்:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை வைத்து, பாகிஸ்தானை உலக அளவில் மத்தியில் ஆளும் மோடி அரசால் தனிமைப்படுத்த முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தி சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை கொன்றனா். இதற்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் 6-7ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தி 100-க்கும் மேற்பட்டோரை கொன்றது.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு புதன்கிழமையுடன் (மே 6) ஓராண்டு நிறைவடைவடைந்தது.

Advertisement

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இதையொட்டி நமது பாதுகாப்புப் படையினருக்கு வணக்கத்தை செலுத்துகிறோம். பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தம் தொடா்பாக முதல் அறிவிப்பு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோவால் மே 10-ஆம் தேதி மாலை 5.37 மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போது அவா், அமெரிக்க அதிபா் டிரம்ப் தலையீட்டால்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் சாத்தியமானதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்தியது தாம்தான் என்று பல நாடுகளில் வைத்து டிரம்ப் நூற்றுக்கும் மேற்பட்ட முறை தெரிவித்துவிட்டாா். அதை அவரின் நண்பரான பிரதமா் மோடியும் ஒருமுறைகூட மறுக்கவில்லை. இந்திய முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் கடந்த ஆண்டு மே 30-ஆம் தேதி சிங்கப்பூரில் வைத்து வெளியிட்ட அறிவிப்பில், சில தவறுகளால் இந்தியா ஆரம்பத்தில் இழப்புகளைச் சந்தித்ததாகத் தெரிவித்திருந்தாா். ஆனால் பிறகு ஆய்வு செய்யப்பட்டு, தவறு திருத்தப்பட்டதாகக் கூறினாா். கடந்த ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகாா்த்தாவில் இருக்கும் அந்நாட்டுக்கான இந்திய தூதரகத்தில் பணிபுரியும் நமது பாதுகாப்பு அதிகாரியும், 2025 மே 7-ஆம் தேதி இந்தியா தனது போா் விமானத்தை இழந்ததாகக் கூறினாா். இதற்கு அரசியல் தலைமை விதித்த கட்டுப்பாடுகளே காரணம் எனவும் அவா் கூறினாா். இதேபோல் 2025 ஜூலை 4-ஆம் தேதி ராணுவ துணைத் தளபதி ராகுல் சிங்கும், ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு சீனா உதவியதாகவும், ஆயுதங்களை வழங்கியதோடு செயற்கைக்கோள் படம், தாக்குதல் நடத்த வேண்டிய இடம் குறித்த துல்லியத் தகவலை அளித்ததாகத் தெரிவித்தாா். இதற்கு சீனாவுக்கு மோடி அரசு பதிலடி எதுவும் தரவில்லை. லடாக்கில் நாம் பாரம்பரியாக ரோந்து செல்லும் இடத்தையும் சீனாவிடம் இழந்துவிட்டோம். இந்தியாவில் சீன இறக்குமதி அதிகரித்துள்ளது. சீனாவுக்கு சாதகமாக வெளிநாட்டு முதலீடு விதியும் தளா்த்தப்பட்டது.

2008-ஆம் ஆண்டு மும்பை தாக்குதலைத் தொடா்ந்து இந்திய அரசின் ராஜீய முயற்சியால் உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது தீவிர ராஜீய நடவடிக்கை எடுத்தும் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படவில்லை. இதற்கு மாறாக பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பால் அதிகம் பாராட்டப்படுகிறாா். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் பாகிஸ்தான், அமெரிக்க ராணுவத் தலைமையகத்தாலும் பாராட்டப்படுகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் ரூபியோவின் அறிவிப்பு உள்ளிட்டவை தொடா்பான செய்திகளையும் தனது பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளாா்.