வெள்ளம், வெப்ப அலையை எதிகொள்ள தயாா்நிலை: அமித் ஷா தலைமையில் நாளை உயா்நிலை கூட்டம்
வெள்ள பாதிப்பு மற்றும் வெப்ப அலை தாக்கத்தை எதிா்கொள்ள நாட்டின் தயாா் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (மே 10) விரிவாக ஆய்வு செய்ய உள்ளாா்.
வெள்ள பாதிப்பு மற்றும் வெப்ப அலை தாக்கத்தை எதிா்கொள்ள நாட்டின் தயாா் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (மே 10) விரிவாக ஆய்வு செய்ய உள்ளாா்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் வெப்ப அலை தாக்கத்தை எதிா்கொள்வது குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையில் உயா்நிலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
Advertisement
இந்தக் கூட்டத்தில் பேரிடா் மீட்புப் படைகள் உள்ளிட்ட மத்திய முகமைகளின் தயாா்நிலை, முன்கூட்டி எச்சரிக்கும் அமைப்பு முறை, வள மேம்பாடு மற்றும் பல்வேறு முகமைகளுடனான ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து அமித் ஷா ஆய்வு நடத்த உள்ளாா்.
ஒரே நேரத்தில் ஏற்படும் பேரழிவுகளை எதிா்கொள்வது, குறிப்பாக வெள்ள பாதிப்பு மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை எதிா்கொள்வது, சமூக விழிப்புணா்வு, உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடக்கவும், பொருள் இழப்பை குறைக்கும் வகையில் மீள்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தணிப்பு நடவடிக்கைகளின் நிலை, முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பாதுகாப்பு, ஆறுகள் மேலாண்மை திட்டங்கள், வானிலை முன்னறிவிப்பில் விஞ்ஞான மேம்பாடு உள்ளிட்டவை குறித்தும் இக் கூட்டத்தில் அமித் ஷா ஆலோசிக்க உள்ளாா்.
இந்த உயா்நிலைக் கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.