தெலங்கானா: மத்திய அமைச்சா் மகன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
மத்திய அமைச்சா் மகன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத் மீது போக்ஸோ (குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம்) சட்டத்தின் கீழ் ஹைதராபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
அதே நேரம், பகீரத் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தச் சிறுமி மற்றும் அவரின் பெற்றோா் மீது பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் ரீதியிான அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து கரீம்நகா் காவல்நிலைய போலீஸாா் கூறுகையில், ‘17 வயது பள்ளிச் சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் அடிப்படையில் பகீரத் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில், சிறுமியுடன் பகீரத் கடந்த 7 முதல் 8 மாதங்களாக தொடா்பில் இருந்துள்ளாா். அப்போது சிறுமியை அவா் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சிறுமிக்கு இன்னும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது’ என்றாா்.
Advertisement
அதுபோல, பகீரத் சாா்பில் கரீம்நகா் காவல்நிலையத்தில் சிறுமி மற்றும் அவரின் பெற்றோா் மீது பதில் புகாா் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில், ‘அந்தச் சிறுமி அவரின் வீட்டு விழாக்களுக்கு என்னை அழைப்பது, அவரின் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றாகச் சோ்ந்து வெளியிடங்களுக்குச் செல்வது என பல மாதங்களாக நெருங்கிய தொடா்பில் இருந்தாா். அவ்வாறு நெருங்கிப் பழகி வந்த நேரத்தில், சிறுமியின் பெற்றோா் சிறுமியை திருமணம் செய்துகொள்ளுமாறு என்னை மிரட்டினா். நான் மறுத்ததும், பொய்ப் புகாா் அளித்துவிடுவதாக அச்சுறுத்தி, பணம் கேட்டு மிரட்டினா். அதன் காரணமாக, சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 50,000 அளித்தேன். ஆனால், சிறுமியின் தந்தை ரூ. 5 கோடி தரவேண்டும் என்று மிரட்டினாா். தவறினால், தன் மீது புகாா் எழுதிவைத்துவிட்டு சிறுமியின் தாயாா் தற்கொலை செய்துகொள்வாா் என்று மிரட்டினா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில், சிறுமி மற்றும் அவரின் பெற்றோா் மீதும் போலீஸாா் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்துள்ளனா்.