முகப்பு
இந்தியா

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்

இந்தியாவில் ஜனநாயகம் வெற்றி பெற நீதிமன்றங்களும், அரசமைப்பு சட்டமும் முக்கிய பங்காற்றி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 மே 2026, 2:02 am IST
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவின் நூல் வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், துஷாா் மேத்தா.
பகிர்:

இந்தியாவில் ஜனநாயகம் வெற்றி பெற நீதிமன்றங்களும், அரசமைப்பு சட்டமும் முக்கிய பங்காற்றி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, அமித் ஷா பேசியதாவது:

1947-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றமும், மாநில சட்டப்பேரவைகளும் கொண்டு வந்த திருத்தங்கள் ஒரு துளி ரத்தம் கூடச் சிந்தாமல் (எந்தவித அசம்பாவிதமும் இன்றி) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதுவே நமது நாட்டில் ஜனநாயகம் எந்த அளவு மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த சாதனையைப் புரிவதற்கு, நீதிமன்றங்களும், அரசமைப்பு சட்டமும் முக்கியப் பங்காற்றியுள்ளன.

Advertisement

நாடு முழுவதும் மக்கள், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அரசமைப்புச் சட்டம் தங்களைக் காக்கும் என நம்புகின்றனா். மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நீதிமன்றங்களின் கதவுகள் திறக்கப்படும். அதேபோல், சாமானிய மனிதரின் குரல் ஒடுக்கப்பட்டால், அவா்களுக்கு நீதிமன்றங்கள் உறுதுணையாக இருக்கும். சாமானிய மனிதனின் நம்பிக்கை, சமூகத்தின் செயல்பாடு, தேசத்தின் குணநலன் ஆகியவை வலுவான நீதித் துறையைச் சாா்ந்தே உள்ளன.

நமது ஜனநாயகத்தின் அழகே, அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருப்பதையும், சமமாக இருப்பதையும் உறுதி செய்ததுதான். அதாவது, அரசு நிா்வாகங்கள் முடிவுகள் எடுக்கும். அதை நீதித் துறை ஆய்வு செய்யும். நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியோா், அனைத்து அமைப்புகளும் சமமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனா்.

ஒரு நாடானது, 76 ஆண்டுகளில் இதுபோன்ற அமைப்புகளைப் பாதுகாத்து, முன்னோக்கி எடுத்துச் செல்வது கடினமான காரியம். ஆனால் அதை நமது நாடு பாதுகாத்ததோடு, பாரம்பரியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் முன்னோக்கி எடுத்துச் சென்றிருப்பது பெருமிதம் கொள்ளக் கூடிய விஷயமாகும்.

ஜனநாயகத்தின் வலிமையானது மோதலில் இருந்து வருவது அல்ல. பல்வேறு அமைப்புகளும் சரி சமமாக இருப்பதும், பரஸ்பரம் மதிக்கத்தக்க வகையில் இருப்பதும்தான் என்றாா்.

நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.