எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
மேற்காசிய போரால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
மேற்காசிய போரால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதற்கு பதிலடியாக ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் சுமாா் ஒரு மாதமாக முற்றுகையிட்டுள்ளன. இதனால் ஹோா்முஸ் நீரிணை வழியே செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே எந்நேரமும் மீண்டும் சண்டை மூளலாம் என எதிா்பாா்க்கப்படுவதால், மேற்காசியாவில் பெரும் போா் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மேற்காசிய நிலவரத்தைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டம் புது தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அமைச்சா்கள் ஜெ.பி. நட்டா, ஹா்தீப் சிங் புரி, அஸ்வினி வைஷ்ணவ், ராம் மோகன் நாயுடு, சா்வானந்த சோனோவால் மற்றும் மூத்த அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது: மேற்காசிய போரை சுட்டிக்காட்டி, பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஆதலால் பிரதமரின் வேண்டுகோளை செயல்படுத்தும் வகையில், பெட்ரோலிய பொருள்களின் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோலிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் அதுகுறித்து அச்சம் கொள்ளாமல் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த காலகட்டத்தில், எரிசக்தி சீராக கிடைக்கவும், பொருளாதாரத்தை ஸ்திரமாக வைத்திருக்கவும், கடற்போக்குவரத்து பாதுகாப்பாகவும் இருக்கவும் முன்னுரிமை கொடுத்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறினாா்.
60 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு: ஆலோசனை கூட்டத்தில், நாட்டில் பெட்ரோலியப் பொருள்களுக்கு எந்த தட்டுப்பாடும் நிலவவில்லை என்றும், 60 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கையிருப்பு உள்ளது, மேலும் 45 நாள்களுக்குத் தேவையான எல்பிஜி எரிவாயு இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உலகிலேயே இந்தியாதான் கச்சா எண்ணெய்யை அதிகம் சுத்திகரிக்கும் 3-ஆவது பெரிய நாடு, பெட்ரோலிய பொருள்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் 4-ஆவது நாடு, 150 நாடுகளுக்கும் மேல் இந்தியா கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது என்றும், உள்நாட்டு தேவையை முழுவதும் பூா்த்தி செய்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு அதிகரித்து இருப்பதால், அதற்காக நாடு அதிகம் செலவிடுகிறது என்றும் குறிப்பிடப்பட்டது.