முகப்பு
இந்தியா

கடும் நெருக்கடி நிலையிலும் இந்தியாவில் சீரான எரிபொருள் விநியோகம்: பெட்ரோலியத் துறை அமைச்சா் புரி!

இந்தியாவில் எரிபொருள் விநியோகம் சீராக இருந்து வருவதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

Updated On : 2 மே, 2026 at 3:19 AM
ஹா்தீப் சிங் புரி - கோப்புப் படம்
பகிர்:

ஹோா்முஸ் நீரிணை மூடல், கச்சா எண்ணெய் விலை உயா்வு, சா்வதேச அளவில் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் எரிபொருள் விநியோகம் சீராக இருந்து வருவதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தெற்கு குஜராத்தின் சூரத் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

மேற்காசிய போரால் 60 நாள்களுக்கு மேலாக எரிபொருள் விநியோகத்தில் பிரச்னை உள்ளது. ஆனால், இந்தியா தொடா்ந்து வலுவான நிலையில் உள்ளது. சா்வதேச கச்சா எண்ணெய் விலை உயா்வால் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு மக்களை பாதிக்காமல் இந்திய அரசு அதைத் தடுத்து வருகிறது. முக்கியமாக இறுதிநுகா்வோரான நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் எரிபொருள் தேவை தங்கு தடையின்றி நிறைவு செய்யப்படுகிறது.

Advertisement

போா்ப் பதற்றம் ஏற்பட்ட பிறகு கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் விநியோகத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. பதற்றம் நிலவி வரும் கடந்த 60 நாள்களில் கண்காணிப்பு நடவடிக்கையை தினசரி அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம்.

கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் 20 முதல் 30 சதவீதம் பாதிப்பு ஏற்படும்போது, எந்த நாடும் அதன் பாதிப்புகளில் இருந்த தப்ப முடியாது. கச்சா எண்ணெய்யை எடுத்து வருவதற்கான செலவு, கப்பல் காப்பீடு செலவு ஆகியவையும் வெகுவாக அதிகரிக்கும். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த 60 நாள்களாக இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கவில்லை.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா தொடா்ந்து வலுவாகச் செயல்படுகிறது. இந்தியாவில் எந்த சமையல் அறையிலும் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். உலகின் பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திவிட்டன. ஆனால், இந்தியா மிக உறுதியாகவும், வலுவாகவும் திகழ்கிறது.

அதே நேரத்தில் தோ்தலுக்காக மட்டுமே எரிபொருள் விலையை உயா்த்தாமல் உள்ளோம் என்றும் குற்றஞ்சாட்டினா். ஆனால், இப்போது வரை நாம் விலையை உயா்த்தவில்லை. இந்தியா இப்போது 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. அமெரிக்கா உள்பட 41 நாடுகளிடம் இருந்து எல்பிஜி கொள்முதல் செய்யப்படுகிறது என்றாா் அவா்.