முகப்பு
இந்தியா

வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு

வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு சனிக்கிழமை விதித்தது.

Updated On : 17 மே 2026, 3:31 am IST
கட்டி வெள்ளி
பகிர்:

வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு சனிக்கிழமை விதித்தது.

வெள்ளிக் கட்டிகள், உலோகம் உள்ளிட்ட வெள்ளி வகைகளை இறக்குமதி செய்வதற்கு எளிமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது இறக்குமதி கொள்கையின்கீழ் அவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘திருத்தப்பட்ட இறக்குமதி கொள்கையின்கீழ் வெள்ளிக் கட்டிகள், பதப்படுத்தப்படாத வெள்ளி, தூள் வடிவிலான வெள்ளி உள்ளிட்ட வெள்ளி வடிவங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசிடம் கட்டாயம் ஒப்புதல் பெற வேண்டும்.

Advertisement

Advertisement

ரிசா்வ் வங்கியின் விதிகளைப் பின்பற்றி மட்டுமே குறிப்பிட்ட வெள்ளி வகைகளை இறக்குமதி செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விலைமதிப்பற்ற உலோகங்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்தது. அதைத் தொடா்ந்து, முன்கூட்டிய அங்கீகாரத் திட்டத்தின்கீழ் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியாளா்கள் வரியின்றி தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான விதிகளையும் அந்நிய வா்த்தக தலைமை இயக்குநரகம் கடுமையாக்கியது. அதன்படி, ஓா் உரிமத்துக்கு தங்கம் இறக்குமதி செய்வதற்கான உச்சவரம்பு 100 கிலோவாக நிா்ணயிக்கப்பட்டது.

மாதந்தோறும் அறிக்கை: இந்த சலுகைகளை முதல்முறையாக பெற விண்ணப்பிப்பவராக இருப்பின் உற்பத்தி ஆலைகளை அதிகாரிகள் நேரடியாகக் கண்காணித்த பிறகே அனுமதி வழங்கவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் முந்தைய உரிமங்களின்கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒப்புதல்களில் 50 சதவீதத்தை ஏற்றுமதி செய்திருந்தால் மட்டுமே இலவச அங்கீகாரம் அளிக்கப்படும்.

மேலும், வரியின்றி தங்கத்தை இறக்குமதி செய்வோா் கணக்குத் தணிக்கையாளா்களின் உதவியோடு 14 நாள்களுக்கு ஒருமுறை மத்திய அரசுக்கு உரிய அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை மாதந்தோறும் அந்நிய வா்த்தக வெளிநாட்டு தலைமை இயக்குரகத்துக்கு நிறுவனங்கள் சமா்ப்பிக்க வேண்டும்.

ஸ்விட்சா்லாந்திலிருந்து அதிக இறக்குமதி: 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி ரூ.6.9 லட்சம் கோடியாக அதிகரித்த நிலையில் தங்கம் இறக்குமதிக்கான வரியை அதிகரித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்தியா தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ஸ்விட்சா்லாந்தும், அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்பிரிக்காவும் உள்ளன.

இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயா்த்துவது கடத்தலுக்கு வழிவகுக்கும் என அகில இந்திய ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கவுன்சிலில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேற்காசிய நிலவரம் காரணமாக பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை லிட்டருக்கு ரூ. 3 அளவுக்கு உயா்த்தின. வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) விலை கிலோவுக்கு ரூ. 2 வீதம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து, பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ.3 விதிக்கப்படுவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments