தாய் - சேய் இறப்பு எண்ணிக்கையை பெருமளவு குறைத்து இந்தியா சாதனை- ஜெ.பி. நட்டா பெருமிதம்
மகப்பேறு காலத்தின்போது நேரிடும் தாய்- சேய் உயிரிழப்புகள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்து இந்தியா சாதனை படைத்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
மகப்பேறு காலத்தின்போது நேரிடும் தாய்- சேய் உயிரிழப்புகள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்து இந்தியா சாதனை படைத்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
ஸ்விட்சா்லாந்தின் ஜெனிவா நகரில் 79-ஆவது சா்வதேச சுகாதார சபையின் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜே.பி. நட்டா, கூட்டத்தின் இடையே குழந்தை பேறு, குழந்தை பிறப்பு, குழந்தை பராமரிப்பு ஆகியவை தொடா்பான சா்வதேச அமைப்பான பிஎம்என்சிஹெச்-இன் தலைவா் ஹெலன் கிளாா்க்கை சந்தித்து பேசினாா். அப்போது ஜே.பி. நட்டா கூறியதாவது:
மருத்துவ துறையில் பெரிய அளவில் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு, புத்தாக்கத்தின் உறைவிடமாக இந்தியா விளங்குகிறது. இந்தத் துறையில் இந்தியா தன்னிடம் உள்ள தொழில்நுட்ப வழிகாட்டுதல், பேறுகால மற்றும் குழந்தை பராமரிப்பில் உள்ள அனுபவங்கள், ஆதரவை உலகுக்கு அளிக்க தயாராக உள்ளது.
Advertisement
Advertisement
மருத்துவத்தில் இளம் பருவத்தினருக்காக தனியாக தேசிய திட்டத்தை இந்தியா கடந்த 2014-ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்தியாவில் பேறுகாலத்தின்போது நேரிடும் தாய் - சேய் உயிரிழப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. உலக அளவில் இதில் காணப்படும் போக்கை விஞ்சி, இந்தியா சாதனை படைத்துள்ளது.
பிஎம்என்சிஹெச் அமைப்பில் வாரிய துணைத் தலைவராகவும், நிலைக் குழு தலைவராகவும் இந்தியா சிறப்பாக பங்களிப்பை அளித்துள்ளது. அதேபோல் இந்த அமைப்புக்கு இந்தியா ஆண்டுதோறும் வழங்கும் 2 மில்லியன் டாலரை விரைவில் விடுவிக்கவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
பிஎம்என்சிஹெச்-இன் தலைவா் கிளாா்க் கூறுகையில், சா்வதேச அளவில் பொது மருத்துவத்துக்கு பெரும் பங்களிப்பு செய்து முதலிடத்தில் இருப்பதாகவும், பிஎம்என்சிஹெச் அமைப்பிலும் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தாா்.