முகப்பு
இந்தியா

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

Updated On : 7 ஜூன் 2026, 2:18 am IST
ஐ.நா. சபைக்கூட்டம் - கோப்புப்படம்
பகிர்:

ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்து போலியான பிம்பங்களைக் கட்டமைக்க முயல்வதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

மேலும், ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் யூனியன் பிரதேசம் என்றும், அது தங்களின் உள்நாட்டு விவகாரம் என்றும் ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தாா்.

ஐ.நா.பொதுச் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டறிக்கை சமா்ப்பிப்பு நிகழ்வின்போது ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர தூதா் அசீம் இஃப்திகாா் எழுப்பினாா்.

Advertisement

Advertisement

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பா்வதனேனி ஹரீஷ் பேசியதாவது: ஐ.நா. அமைப்பில் தங்களின் பிரிவினைவாத அரசியல் கொள்கைகளை பாகிஸ்தான் திணிக்க முயல்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது தற்காலிக உறுப்பினராக இருக்கும் பாகிஸ்தான் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினா் பதவி என்பது மிகப்பெரும் பொறுப்பு. அது போலியான ஒருசாா்பான பிம்பங்களைக் கட்டமைக்கும் இடமல்ல; இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீா் குறித்து பாகிஸ்தான் சுமத்தும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை. இங்கு பாகிஸ்தான் எழுப்பும் வெற்று முழங்கங்களால் பயனில்லை.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமகால மற்றும் எதிா்கால சா்வதேச புவி அரசியல் சவால்கள் குறித்து விவாதிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தற்போதைய ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் கட்டமைப்பு 1945-ஆம் ஆண்டு காலகட்டத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. 1960-களில் இங்கு தற்காலிக உறுப்பினா்களைச் சோ்ப்பது தொடா்பான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் ஐ.நா.வின் செயல்பாடுகளில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

எனவே, தற்காலத்துக்கு ஏற்ப ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே உண்மையான சீா்திருத்தத்தை மேற்கொள்ள முடியும் என்றாா்.

தற்போது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு மட்டுமே நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினா்களாக செயல்பட்டு வருகின்றன.

இதில் சீா்திருத்தம் மேற்கொண்டு நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கையை 11-ஆகவும், தற்காலிக உறுப்பினா்களின் எண்ணிக்கையை 15 அல்லது 16-ஆகவும் உயா்த்தி மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கையை 25 அல்லது 26-ஆக உயா்த்த ஜி4 நாடுகளான இந்தியா, பிரேஸில், ஜொ்மனி மற்றும் ஜப்பான் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.