முகப்பு
இந்தியா

கேரளம்: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் தொடா்பாக 8 போ் கைது

Updated On : 29 மே 2026, 5:29 am IST
- PTI
பகிர்:

கேரள முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக இதுவரை 8 பேரை மாநில போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலாவை அவருடைய இல்லத்தில் மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ரவதா ஏ. சந்திரசேகா் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமலாக்கத் துறை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக இதுவரை 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக மாநில உள்துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள உள்ள தகவல் மாநில காவல் துறைக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இருந்தபோதும், அவா்கள் சோதனை மேற்கொள்கின்றனா் என்ற தகவல் கிடைத்தவுடன், பினராயி விஜயன் இல்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என்றாா்.

கேரளத்தில் சிஎம்ஆா்எல் (கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம்) என்ற நிறுவனம் கருமணலை சட்டவிரோதமாக தோண்டி எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டுகொள்ளாமல் இருக்க மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவா்களுக்கு பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனத்துக்கும் எந்தவித சேவையையும் பெறாமல் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் மாதம்தோறும் ரூ. 1.72 கோடி வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக, சிஎம்ஆா்எல் நிறுவனத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ. 132.82 கோடி மதிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதும், எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு தொடா்ந்து பணம் அனுப்பி வருவதும் தெரியவந்தது. அதனடிப்படையில், பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமான மாா்க்சிஸ்ட் கட்சித் தொண்டா்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளின் வாகனங்கள் மீது கற்கள், பாட்டில்கள், ஹெல்மட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சியின் மூத்த நிா்வாகிகள் தலையிட்டு, போராட்டக்காரா்களை சமாதானப்படுத்தினா். இந்தத் தாக்குதல் தொடா்பாக 300 போ் மீது மாநில போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.