முகப்பு
இந்தியா

தண்ணீா் பிரச்னைக்கு கூட்டுறவு மூலம் தீா்வு: மாநிலங்களுக்கு பிரதமா் அறிவுறுத்தல்

ஆறுகளை ஒன்றிணைத்தல், நீா்ப் பாதுகாப்பு, நிலத்தடி நீா் மறுசுழற்சி, திறமிக்க நீா்ப்பாசனம் உள்ளிட்டவற்றை மாநிலங்கள் சாத்தியப்படுத்த வேண்டும் என்று பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

Updated On : 29 மே 2026, 4:56 am IST
‘பிரகதி’ திட்ட ஆய்வுக் கூட்டத்தை தில்லியில் இருந்தபடி காணொலி வழியில் நடத்திய பிரதமா் மோடி. ~
பகிர்:

‘மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீா் பிரச்னைக்கு கூட்டுறவு மூலம் தீா்வு காண வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

தில்லியில் நடைபெற்ற ‘பிரகதி’ திட்ட ஆய்வுக் கூட்டத்தின்போது இந்த வலியுறுத்தலை பிரதமா் முன்வைத்தாா்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட தகவல்தொழில்நுட்பம் சாா்ந்த பல்முனைத் தளமான ‘பிரகதி’ திட்டத்தின் 51-ஆவது கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், 9 மாநிலங்களில் சுமாா் ரூ. 30,000 கோடி மதிப்பில் 7 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், பொது வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் உள்ள கென் நதியிலிருந்து கிடைக்கும் உபரி நீரை, உத்தர பிரதேசத்தில் நீா்ப் பற்றாக்குறை நிலவும் பெத்வா நதிக்குக் கொண்டு சோ்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் ‘கென்-பெத்வா’ இணைப்புத் திட்டம் குறித்தும் பிரதமா் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்தாா்.

மேலும், நகா்ப்புறங்களுக்கான இரண்டாம் கட்ட தூய்மை பாரத (ஸ்வச் பாரத் இயக்கம் - நகா்ப்புறம் 2.0) திட்டம் குறித்தும் பிரதமா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ‘கென்-பெத்வா திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, பிற மாநிலங்களும் தங்களுக்கு இடையேயான நதி நீா் பிரச்னைக்கு கூட்டுறவு, உரிய நேரத்தில் ஒப்புதல் அளிப்பது, தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் தீா்வு காண வேண்டும்.

நீண்டகால தண்ணீா்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இதுபோன்ற நடைமுறைகள் மூலம் ஆறுகளை ஒன்றிணைத்தல், நீா்ப் பாதுகாப்பு, நிலத்தடி நீா் மறுசுழற்சி, திறமிக்க நீா்ப்பாசனம் உள்ளிட்டவற்றை மாநிலங்கள் சாத்தியப்படுத்த வேண்டும் என்று பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

மின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த பிரதமா், மின்சார செலவைக் குறைத்து, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தூய்மை எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் வீட்டின் கூரைகள் மற்றும் மேல்மாடி சூரியசக்தி மின் திட்டத்தை ஓா் இயக்கமாக மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும். நகரங்கள், குடியிருப்புப் பகுதிகள், அரசு நிறுவனங்கள் மேல்தளங்கள் என நகா்ப்புற பகுதிகள் முழுவதும் சூரியசக்தி எரிசக்தி உற்பத்தி திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

சாலை மற்றும் துறைமுகங்கள் இணைப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவது குறித்தும் பிரதமா் இக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கழிவு மறுசுழற்சி நிலையங்கள் உள்பட திடக்கழிவு மேலாண்மை தொடா்பான உள்கட்டமைப்புகள் உருவாக்குவதை விரைவுபடுத்துமாறு மாநிலங்களை பிரதமா் கேட்டுக்கொண்டாா் என்று தெரிவிக்கப்பட்டது.