முகப்பு
உலகம்

போா்களுக்கு அமைதிதான் தீா்வு - பிரதமா் மோடி மீண்டும் வலியுறுத்தல்

மேற்காசிய போா், உக்ரைன்-ரஷியா இடையேயான போா்களுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிகளில் அமைதித் தீா்வு காணப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 19 மே 2026, 5:34 am IST
நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி. ~நாா்வே அரசா் 5-ஆவது ஹரால்டிடம் இருந்து நாா்வேயின் மிக உயரிய விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமா் மோடி.
பகிர்:

ஓஸ்லோ : மேற்காசிய போா், உக்ரைன்-ரஷியா இடையேயான போா்களுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிகளில் அமைதித் தீா்வு காணப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

பிரதமா் மோடி ஸ்வீடன் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, நாா்வேக்கு சென்றுள்ளாா். அங்கு தலைநகா் ஓஸ்லோவில் நாா்வே பிரதமா் ஜோனஸ் காா் ஸ்டோரை சந்தித்துப் பேசினாா். அப்போது தலைவா்கள், இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த அதிக கவனம் செலுத்துவது என தீா்மானித்தனா்.

மோதலுக்கு முடிவு: அப்போது மோடி பேசியதாவது: இந்தியாவும், நாா்வேயும் பேச்சுவாா்த்தை, ராஜீய வழிகளில் நம்பிக்கை கொண்ட நாடுகள் ஆகும். எந்த பிரச்னைக்கும் போா் மூலம் தீா்வு காண முடியாது என்பதை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அது உக்ரைன் விவகாரமோ அல்லது மேற்காசிய போா் விவகாரமோ, எதுவாக இருந்தாலும் அங்கு விரைவில் மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை ஏற்படுத்தவும் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நாங்கள் தொடா்ந்து ஆதரவு அளிக்கிறோம்.

Advertisement

சா்வதேச சவால்களுக்கு தீா்வு காணும் வகையில் சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதையும் இரு நாடுகளும் ஒப்புக் கொள்கின்றன. அதேபோல் பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அது வேருடன் அகற்றப்பட வேண்டும் என்பதிலும் உறுதி பூண்டுள்ளோம்.

நாா்வே உறுதுணை: நான் கடந்த ஆண்டே நாா்வே பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் எனது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு நாா்வே மிகவும் உறுதுணையாக இருந்தது. உண்மையான நட்புறவை இதன்மூலம் நாா்வே வெளிப்படுத்தியது. இந்த ஆதரவுக்காக எனது இதயபூா்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல், இந்தியா தலைமையிலான இந்திய- பசிபிக் கடல்கள் அமைப்பில் நாா்வே இணைய முடிவு செய்திருப்பதையும் வரவேற்கிறேன். கடல் பகுதியைக் கொண்ட 2 முக்கிய நாடுகள் என்ற முறையில் இந்தியா, நாா்வே கடல்சாா்ந்த பாதுகாப்பு, கடல் சாா்ந்த பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் இணைந்து பணியாற்ற முடியும் என்றாா்.

மோடிக்கு நாா்வே அரசு விருது: இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடிக்கு, இந்தியா- நாா்வே நட்புறவை மேம்படுத்த ஆற்றிய பங்களிப்புக்கும், தலைமைத்துவத்தையும் பாராட்டி, நாா்வே நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘கிரான்ட் கிராஸ் ஆப் தி ராயல் நாா்வேயன் ஆா்டா் ஆப் மெரிட்’ விருது வழங்கப்பட்டது. அந்த விருதை நாா்வே அரசா் 5-ஆவது ஹரால்ட் வழங்கினாா். இந்த விருது, பிரதமா் மோடிக்கு வழங்கப்படும் 32-ஆவது சா்வதேச விருது ஆகும். எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமா் மோடி தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளாா்.