சிலர் மட்டும் எப்படி அதிக மார்க் வாங்குகிறார்கள்? வகுப்பறையில்கூட அவர்களிடம் கேள்வி கேட்டால், டாண் டாண் என பதில் சொல்கிறார்களே. அப்படி என்ன அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் மூளை என ஆச்சரியமாக உங்கள் வகுப்பில் இருக்கும் இன்னொரு மாணவரைப் பார்த்து ஏங்கும் மாணவரா நீங்கள்? அப்படியென்றால், இந்தக் கட்டுரைத் தொடரை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
நீங்கள் பிரமிக்கும் ‘ஸ்பெஷல் மூளை’ என்று எதுவும் இல்லை என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
அதெல்லாம் சரி சார்! ஆனால், அவர்களுக்கு மட்டும் பாடம் எப்படி நன்றாகப் புரிகிறது. ஆசிரியர் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் டக் டக்கென்று பதிலும் சொல்கிறார்களே அது எப்படி என்பது புதிராகவே இருக்கிறதா?
நீங்க என்ன வேணா சொல்லுங்க. அவங்கெல்லாம் வேற லெவல் சார் என நீங்கள் நினைக்கின்றீர்களா?
யாரும் வேற லெவலில் இல்லை.
உங்கள் வகுப்பில் எல்லோருக்கும் ஒன்றுபோலத்தான் பாடம் நடத்துகிறார்கள். உங்களுடன் வகுப்பில் படிக்கும் உங்கள் நண்பர்களுக்கெல்லாம் ஒரே வயதுதான். அதனால், எல்லோருடைய புரிந்துகொள்ளும் திறமையும் ஒன்றேதான். இதை முதல்ல மனசுல பதிச்சி வெச்சிக்கோங்க.
அப்பறம், எங்கே எப்படி வித்தியாசம்? இது ரொம்ப முக்கியமான கேள்விதான். விரிவான பதிலைப் பார்க்கலாம்.
இந்த மாதிரியான எல்லா கேள்விகளுக்கும் முயற்சியும் ஈடுபாடும்தான் காரணம் என்பதுதான் பொதுவான, சரியான பதில்.
அப்படியானால், அந்த மாதிரி மாணவர்கள் மட்டும்தான் முயற்சி செய்கிறார்களா? அவர்கள் மட்டும்தான் ஈடுபாடு காட்டுகிறார்களா என்றால், ஒரு திருக்குறளில் அதற்குப் பதில் இருக்கிறது.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. (594 - ஊக்கமுடைமை)
என்பதுதான் அந்தக் குறள்.
அதாவது, முயற்சியும் ஈடுபாடும் மட்டும் போதாது. அதை ஊக்கத்துடன் செய்ய வேண்டும். அப்படி செய்பரைத்தான் உயர்வு தேடிக்கொண்டுபோய் சேருமாம்.
அப்புறமென்ன, பாடங்களை ஊக்கத்துடன் படிக்க வேண்டியதுதானே?
இங்கேதான் சிக்கல். பள்ளியில் வகுப்பறை என்றாலும் சரி, அல்லது வீட்டிலே நமது அறை என்றாலும் சரி. பாடம் படிப்பது, ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனிப்பது என்பதில்தான் எத்தனை சவால்கள். இதில் எங்கே ஊக்கம் வரும், தூக்கம்தான் வரும் என்று புலம்ப வேண்டாம். வழி இருக்கிறது.
வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்தில் முழுக் கவனம் செலுத்துவதற்கு முன், நமக்கு சில விஷயங்கள் தெளிவாகத் தெரிய வேண்டும். அவற்றைத் தெரிந்துகொண்டால்தான், அதற்கேற்ப நாம் பயிற்சி எடுத்துக்கொள்ள முடியும்.
உதாரணமாக, ஒவ்வொரு வயதிலும் பாடத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும் நேர அளவு மாறுபடும். எப்படியென்றால்,
4 வயது மாணவருக்கு 20 நிமிடங்கள் வரை
5 வயது மாணவருக்கு 25 நிமிடங்கள் வரை
6 வயது மாணவருக்கு 30 நிமிடங்கள் வரை
7 வயது மாணவருக்கு 35 நிமிடங்கள் வரை
8 வயது மாணவருக்கு 40 நிமிடங்கள் வரை
9 வயது மாணவருக்கு 45 நிமிடங்கள் வரை
10 வயது மாணவருக்கு 50 நிமிடங்கள் வரை
11 வயது மாணவருக்கு 55 நிமிடங்கள் வரை
12 வயது மாணவருக்கு 60 நிமிடங்கள் வரை
இப்படி, ஒரு விஷயத்தில் வயதுக்கு ஏற்ப தொடர்ந்து கவனம் செலுத்த இயலும். இந்தக் கால அளவுக்கு அதிகமாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முயற்சி செய்யும்போது, மூளை இயற்கையாகவே சோர்வடைகிறது. அதனால், கவனம் செலுத்துவதில் குறை உண்டாகிறது. இந்த மிக முக்கியமான விஷயத்தை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஓகே! மிக முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொண்டோம். அடுத்த விஷயத்துக்குப் போவோம்.
நமது கண், காது, மூக்கு, நாக்கு, தொடு உணர்வு எனும் ஐம்புலன்களின் வழியாகத்தான் நமது மூளைக்குத் தகவல் போகிறது என்பது தெரிந்த விஷயம்தானே! பாடம் படிக்கும்போதும் இந்த ஐந்து புலன்களின் ஒத்துழைப்பு வேண்டும்தானே!
வகுப்பறையில் இந்த ஐந்து புலன்களிடம் இருந்தும் நமக்கு ஒத்துழைப்பு கிடைத்துவிட்டால், அப்புறமென்ன வெற்றிதான்! அதுதான் எப்படி எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
வகுப்பில் பாடத்தைக் கவனிக்கும்போது நமக்கு இரண்டு புலன்கள் மிகவும் விழிப்புடன் இருந்தால் போதும்! ஜமாய்த்துவிடலாம்.
கண்களும், காதுகளும் விழிப்புடன் இருந்தால் போதும்! ஜெயித்த மாதிரிதான்!!
வகுப்பறையிலோ அல்லது வீட்டிலோ பாடம் படிக்கும்போது, கண்களும் காதுகளும் பாடத்தில் கவனம் செலுத்தாமல் போவதற்கு என்ன காரணம்? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
(தொடரும்)