முகப்பு
கண்ணோட்டம்

சுவாமிஜியின் கடல் பயண அனுபவம்.....

பம்பாயிலிருந்து கொழும்பு போய்ச் சேர்ந்தார் சுவாமிஜி. கிட்டத்தட்ட அன்று முழுவதுமே கப்பல் துறைமுகத்தில் நின்றது.

Updated On : 1 ஜூலை 2013, 5:28 pm IST
பகிர்:

பம்பாயிலிருந்து கொழும்பு போய்ச் சேர்ந்தார் சுவாமிஜி. கிட்டத்தட்ட அன்று முழுவதுமே கப்பல் துறைமுகத்தில் நின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நகரத்தைச் சுற்றிப் பார்த்தோம். தெருக்கள் வழியாகச் சென்றோம். எனக்கு நினைவிலுள்ளது புத்தர் கோயில் ஒன்று புத்த பகவானின் மிகப்பெரிய திருவுருவம், அவர் சாய்ந்தவாறு அமர்ந்து நிர்வாண நிலையை எய்துகின்ற நிலை அது. கோயிலிலுள்ள மதகுருமார்களுடன் பேச முயன்றேன். ஆனால் அவர்களுக்குச் சிங்களம் தவிர வேறெந்த மொழியும் தெரியவில்லை. எனவே எனது முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று. அங்கிருந்து சுமார் 80 மைல் தொலைவில் மத்திய இலங்கையில் உள்ளது கண்டி நகரம். இலங்கை பௌத்த மதத்தின் மையம் இது. அங்கே போவதற்கு நேரம் கிடைக்கவில்லை. இங்குள்ள பௌத்த இல்லறத்தினர். ஆண் பெண் அனைவரும் அசைவ உணவு உண்கின்றனர். மதகுருமார்கள் மட்டுமே சைவ உணவினர். சிங்களர்களின் உடையும் முகமும் உங்கள் தமிழர்களுடையது போல்தான் இருக்கிறது. அவர்களது மொழிபற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் உச்சரிப்பைக் கேட்டால் அது உங்கள் தமிழ் போலவே உள்ளது.

'கப்பல் அடுத்ததாக நின்ற இடம் பினாங்கு. மலேயா தீபகற்பத்தில் கடலோர நிலத்துண்டு இது. மலேயா மக்கள் முகமதியர்கள். பண்டைய நாளில் இவர்கள் பிரபலமான கடற்கொள்ளைக்காரர்களாக இருந்தார்கள். வியாபாரிகளுகக்குக் குலைநடுக்கத்தைக் கொடுத்தவர்கள். ஆனால் இன்று சுழல் மேடைகளுடன் கூடிய கப்பல்களிலுள்ள பெரும் துப்பாக்கிகள் மலேயர்களைக் கொடுமையற்ற வேறு பிழைப்பு வழிகளை நாடு மாறு கட்டாயப்படுத்தி விட்டன.

'பினாங்கிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் உயர்ந்த மலைகளுடன் கூடிய சுமத்ரா தீவைத் தொலைவில் கண்டோம். பண்டை நாட்களில் கடற்கொள்ளையர்கள் விரும்பி உலவுகின்ற பல இடங்களைக் கேப்டன் எனக்குக் காட்டினார்.

Advertisement

Advertisement

'ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மென்ட்டின் தலைநகரம் சிங்கப்பூர். அங்கு தாவர ஆராய்ச்சிக்கான அழகிய தோட்டம் ஒன்று உள்ளது. அதில் மிகச் சிறந்த பனை வகைகள் உள்ளன. அழகிய விசிறி போன்று ஓலை கொண்டதான 'பயணியின் பனை' இங்கு ஏராளமாக வளர்கிறது. எங்கும் கறிப் பலா மரங்கள் வளர்ந்துள்ளன. தமிழ்நாட்டில் மாமரம் ஏராளமாகக் காணப்படுவதைப் போல், பிரசித்தி பெற்ற மங்குஸ் தான் மரங்கள் இங்கு ஏராளம் உள்ளன. ஆனால் மாம்பழம் இணையற்றது. இங்குள்ளவர்கள் கிட்டத்தட்ட தமிழர்களைப் போன்றே உள்ளனர். ஆனாலும் தமிழர்களின் கருநிறத்தில் பாதிகூட இவர்களிடம் இல்லை. சிங்கப்பூரில் அழகிய கண்காட்சிச் சாலையும் உள்ளது. வெற்றிலைப் பழக்கமும் இன்ப நாட்டமும் இங்கே அதிகமாகக் காணப்படுகிறது, இங்கு குடியேறியுள்ள ஐரோப்பியர்கள் ஏதோ முதற்கடமை போலவே இவற்றில் ஈடுபடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.