முகப்பு
குழந்தைகள் உலகம்

பேல்பூரி 17-05-2026

'ஒவ்வொரு 'வலி'யும் ஒரு பாடத்தைத் தரும்...

பகிர்:

கண்டது

(புதுச்சேரி திருபுவனை அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'சிலுக்காரிபாளையம்.'

Advertisement

-நாகஜோதி செந்தில்குமார், நாகப்பட்டினம்.

(செங்கல்பட்டு மருத்துவமனை அருகே ஆட்டோ ஒன்றின் பின்புறம் எழுதியிருந்த வாசகம்)

'இன்றைய (அ) லட்சியம்

நாளைய (ஏ)மாற்றம்.'

-க.அருச்சுனன், செங்கல்பட்டு.

(திருச்சியில் ஓடிய வாகனம் ஒன்றில் எழுதியிருந்தது)

'ஒவ்வொரு 'வலி'யும் ஒரு பாடத்தைத் தரும்...

ஒவ்வொரு பாடமும் ஒரு 'வழி'யைத் தரும்.'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

கேட்டது

(சென்னை, தி.நகர் பூங்காவில் இரு நண்பர்கள்)

'கன்னத்துல கைவச்சிட்டிருந்தான்னு

உன் பையனை நீ அடிச்சது நியாயமே இல்லை...'

'அவன் ஒரு பொண்ணு கன்னத்துலயில்ல கைவச்சுக்கிட்டு இருந்தான்.'

-வசீகரன், தேனாம்பேட்டை.

(செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் கணவனும், மனைவியும்)

'இதப்பாரும்மா... வீட்டுல உன்னை விட்டுட்டு உடனே வந்துடுவேன்...'

'என்னங்க அவசரம்?'

'அங்கேயிருந்தா உங்கப்பா என்னை சமைக்கச் சொல்லுவாரே!'

-சிவம், திருவள்ளூர்.

(திருச்சியில் தேநீர்க்கடை ஒன்றில் இருவர்)

'பள்ளி விடுமுறையில் இருக்கிற என் பசங்க பாக்கெட் மணி கேட்கிறதே இல்லை...'

'ஆச்சரியமாயிருக்கே..?'

'பாக்கெட் மணி வாங்கினால்... போனை நோண்டாமல் வீட்டு வேலைகளைச் செய்யணும்னு சொல்லியிருக்கேன்!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

'நல்லது போனால் தெரியும்...

கெட்டது வந்தால் தெரியும்!'

- க. பூமலை, நமசிவாயபுரம்.

மைக்ரோ கதை

'வாழ்க்கை முழுவதும் கஷ்டம், குருவே!' என்றான் அவன்.

'ஏன் புலம்புகிறாய்... என்ன பிரச்னை?' என்றார் குரு.

'படிப்பு பாதியில் நின்றுவிட்டது. பல வியாபாரங்கள் செய்தும் அனைத்திலும் நஷ்டம்!' என்றான் அவன்.

குரு அவனை சிறிது தூரம் அழைத்துச்சென்றார். ஓரிடத்தில் புல், செடியெல்லாம் காய்ந்து பரிதாபமாகக் கிடந்தன.

'இன்னும் ஒருவாரம் கழித்து வா!' என்றார்.

அவனும் ஒருவாரம் கழித்து வந்தான். இருவரும் அதே இடத்துக்குச் சென்றார்கள். இப்போது புல், செடியெல்லாம் பசுமையாகக் காட்சிதந்தன.

குரு சொன்னார், 'என்றாவது ஒருநாள் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்குள்ள புல், செடிகள் இருந்தன. நான் ஒருவாரம் இவற்றுக்குத் தண்ணீர் ஊற்ற ஏற்பாடு செய்தேன். இப்போது பார்... எவ்வளவு பசுமையாக மாறிவிட்டது. எதை வேண்டுமானாலும் இழக்கலாம்... நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது!'

தெளிவுபெற்றான் அவன்.

-பே.சண்முகம், செங்கோட்டை.

எஸ்எம்எஸ்

'நொடிகளைத் துல்லியமாகப் பயன்படுத்து...

மொத்தக் காலமும் உனக்குக் கட்டுப்படும்!'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

அப்படீங்களா!

சிறு தொழில் நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் இந்திய மொழிகளில் பதிலளிக்கும் சேவையை வாட்ஸ் ஆப் பிஸினஸ் தொடங்கி உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் வர்த்தகம் தொடர்பான தகவல்களை வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப்பில் உள்ளூர் மொழிகளில் தெரிந்து கொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இதை வாட்ஸ்ஆப் பிஸினஸில் வணிக உரிமையாளர்கள் தேர்வு செய்யலாம்.

இந்தியா உள்பட பிரேசில், கம்போடியாவில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பிஸினஸ் ஏ.ஐ. ஏஜென்ட் சேவையை உரிமையாளர்கள் தேர்வு செய்துவிட்டால் போதும், அந்த உரிமையாளர் விற்பனை செய்யும் பொருள்கள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகள், சேவைகள், விலை, தள்ளுபடி, முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவது ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவே பார்த்துக்கொள்ளும்.

விரைவில் இந்த சேவையில் யூ.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் சேவையும் இணைக்கப்பட உள்ளது.

வாட்ஸ்ஆப் பிஸினஸ் சேவைக்கான தேவை இந்திய சந்தையில் பெருமளவில் உள்ளதால் அந்த நிறுவனம் இதில் புதுமையைப் புகுத்தியுள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.