பேல்பூரி
அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்!
கண்டது
(சென்னை அசோக் நகரில் நின்றிருந்த ஆட்டோவின் பின்புறம் எழுதியிருந்த வாசகம் )
'அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்!'
Advertisement
Advertisement
- க. பூமலை, நமசிவாயபுரம்.
(கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'மீதிகுடி.'
-எஸ்.அங்கயற்கண்ணி, காரைக்கால்.
(கொச்சியில் ஒரு பஸ் நிறுத்தத்தின் பெயர்)
'மேனகா.'
-சி. ஆர். ஹரிஹரன், கொச்சி.
கேட்டது
(செங்கோட்டை அம்மன் சந்நிதி தெருவில் இரு பெண்கள்)
'எங்க வீட்டுல திடீர்னு காஸ் தீர்ந்துபோச்சு...'
'அப்படியா.... எங்க வீட்டுல ஃபுல் சிலிண்டர் இல்லையே?'
'பரவாயில்லை. இன்னைக்கு எங்க வீட்டுல எல்லோரும் உங்க வீட்டுக்குச் சாப்பிட வந்துடறோம்.'
-ச.லெட்சுமி, செங்கோட்டை.
(விழுப்புரத்தில் திரையரங்கம் ஒன்றில் தம்பதியர்)
'ஆடிகார் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்களே... இன்னும் ஏன் வாங்கித்தரலை?'
'ஆடி மாசம் வரட்டும். ஒரு பழைய கார் வாங்கித் தர்றேன்!'
-கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
(திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்தில் இருவர்)
'பேருந்தை எடுக்க மாட்டேங்கிறானே?'
'டயம் வரணும் இல்லை... உங்க அவசரத்துக்கு எல்லாம் எடுக்கமுடியுமா?'
'நீங்க ஏன் கோபப்படுறீங்க?'
'பஸ்úஸாட டிரைவரே நான்தான்!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
'மனிதர்களுக்கு இரண்டே ஆசைதான்...
சொத்தும் போகக் கூடாது; செத்தும் போகக் கூடாது!'
-கு.பன்னீர்செல்வம், தஞ்சாவூர்.
மைக்ரோ கதை
மெடிக்கல் ஸ்டோரில் சில மருந்துகளை எண்பது ரூபாய்க்கு நான் வாங்கிக்கொண்டு, அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, மீதி சில்லறை பெறும்போது நானூற்று இருபது ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார் கடையில் உள்ள பெண்.
'இங்க பாரும்மா... நான் கொடுத்தது நூறு ரூபாய்தான். எண்பது ரூபாய் போக, நானூற்று இருபது கொடுக்கிறீங்க?' என்றதும், என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.
'நல்லா பாருங்க சார்... நீங்க ஐந்நூறு ரூபாய் கொடுத்த மாதிரி தெரியுது...'
'நான் அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படாதவன்...' என்று சொல்லி, நானூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்தபோது எனக்குள்ளே ஒரு பெருமிதம்!
வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவி கேட்டார். 'ஒரு லிட்டர் நல்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னனே... வாங்கி வந்தீங்களா?'
நான் திருதிருவென விழித்தேன்.
'நல்லெண்ணெய் வாங்க உங்கள் பையில் உள்ள நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு ஐந்நூறு ரூபாய் வாங்கிட்டுப் போனீங்களே... அது எங்கே?' என்று மனைவி கேட்டபோதுதான், எனக்குப் புரிந்தது மருந்துக்கடை பெண்ணின் வினோதப் பார்வை!
-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
எஸ்.எம்.எஸ்.
'விரும்புவதைச் செய்யாதே...
செய்வதை விரும்பு!'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
அப்படீங்களா!
கைப்பேசியில் புதிய அழைப்பு வந்தால், அது யார் என்று தெரியாமல் பலர் பதிலளிக்க யோசிப்பதுண்டு. அதிலும் சில செயலிகள் அந்த எண்ணில் பதிவிடப்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் புதிய சேவையாக நமது கைப்பேசியில் பதிவிடப்படாத புதிய எண்ணை தொடர்பு கொள்ள முற்பட்டால், அந்த எண் குறித்த விவரங்களை வாட்ஸ்ஆப்பே அளிக்கும் புதிய சேவை அறிமுகமாகி வருகிறது.
போலி எண்களிலிருந்து வரும் மோசடி சேவைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த புதிய நடவடிக்கையை வாட்ஸ்ஆப் செயல்படுத்தி உள்ளது.
கைப்பேசியில் பதிவிடப்படாத எண்ணுக்கு நாம் தகவல் அனுப்ப முயன்றாலே, அல்லது அந்த எண்ணில் இருந்து வந்துள்ள தகவலை அறிய முற்பட்டாலோ வாட்ஸ்ஆப் முன்னெச்சரிக்கை தகவலை அளிக்கும்.
அதன்படி, அந்த எண் எந்த நாட்டில் பதிவாகி உள்ளது, அந்த எண் நமது சேமிப்பு எண்ணில் உள்ளதா இல்லையா, நமது சாட்களில் இந்த எண் பகிரப்பட்டுள்ளதா என்ற தகவல்களை வெளிப்படுத்தும் வாட்ஸ்ஆப், இந்த எண்ணுடன் தகவல் பரிமாற்றம் செய்யவேண்டுமா இல்லையா எனத் தேர்வைக் கேட்டுச் செயல்படும்.
இந்தக் கேள்விகள் அந்த எண்ணின் சொந்தக்காரருக்குத் தெரியாமல் செயல்படுத்தப்படும்.
தற்போது குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சேவை, விரைவில் அனைவருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
-அ.சர்ப்ராஸ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.