ஆன்மிக எழுத்தாளர் ரா.கணபதி காலமானார்
சென்னை, பிப்.20: ஆன்மிக எழுத்தாளரும் காஞ்சி மகாபெரியவரின் ’தெய்வத்தின் குரல்’ நூலைத் தொகுத்தவருமான ரா.கணபதி, சென்னையில் திங்கள்கிழமை மாலை 7.30 மணி அளவில் காலமானார். கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குற
சென்னை, பிப்.20: ஆன்மிக எழுத்தாளரும் காஞ்சி மகாபெரியவரின் ’தெய்வத்தின் குரல்’ நூலைத் தொகுத்தவருமான ரா.கணபதி, சென்னையில் திங்கள்கிழமை மாலை 7.30 மணி அளவில் காலமானார்.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பெரிதும் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் இல்லத்தில் அமர்ந்த நிலையிலேயே அவருடைய உயிர் பிரிந்தது. தி.நகரில் உள்ள தன் சகோதரியின் வீட்டு மாடியில் அவர் வசித்து வந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எழுத்துக்காக திருமணமே செய்து கொள்ளாமல் நைஷ்டிக பிரமசாரியாக வாழ்க்கை நடத்தியவர். காஞ்சி சங்கர மடத்தின் பக்தராகத் திகழ்ந்தவர். காஞ்சி மகாபெரியவர் சொல்லச் சொல்ல அவருடைய கருத்துகள் மற்றும் உபந்நியாசங்களைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். இது 7 பாகங்களாக வெளிவந்தது. மேலும், காமகோடி ராமகோடி, காமாக்ஷி கடாக்ஷி உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதி மயிலாபூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்ட "அம்மா-ஸ்ரீ சாரதாதேவியாரின் வாழ்க்கை வரலாறு”, "அறிவுக் கனலே அருட்புனலே - ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு” நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஆன்மிக உலகில் தன் நூல்களால் நீங்கா இடம் பெற்றவர் ரா.கணபதி. சிவபெருமான் மீது பெரும் பக்தி கொண்டவர். சிவராத்திரி தினத்தில் சிவநாமம் கூறியபடி அவர் உயிர் பிரிந்தது ஆச்சரியம் என்றனர் உடன் இருந்த அன்பர்கள்.
Advertisement
Advertisement
தகவலுக்கு: 044 2815 5834