சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்!
சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது பற்றி...
சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.
சிபிஎஸ்இ கல்வி முறையில் மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் திரையில் மதிப்பிடல் (ஓஎஸ்எம்) முறை மூலம் பதிவிடப்படுகிறது. இந்த முறை மீது மாணவா்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனா்.
மதிப்பெண்கள் அளிப்பதில் முரண்பாடுகள் உள்ளதாகவும், சிபிஎஸ்இ அமைப்பால் பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள், தங்களது கையெழுத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், இந்த முறையில் விடைத்தாள்கள் மாறியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவா்கள் கவலை தெரிவித்திருந்தனா்.
Advertisement
Advertisement
இந்த குளறுபடிக்கு தான் பொறுப்பேற்பதாக தெரிவித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு கோரியவா்களின் விடைத்தாள்களை மீண்டும் திருத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்தக் குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். பிரச்னைக்கான தீா்வுகளும் அளிக்கப்படும். ஒரு மாணவா்கூட இந்த முறையால் பாதிக்கபடாதபடி உறுதி செய்வோம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, மறுமதிப்பீட்டு தளத்தை மத்திய கல்வி அமைச்சகம் முடக்கி வைத்திருந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் செயல்பாட்டு வந்துள்ளது.
வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி வரை மதிப்பெண் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களுக்காக இணையதளம் செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட பிரதிகளைப் பெற்ற மாணவர்கள், அதில் ஏதேனும் முரண்பாடுகளோ அல்லது குறைபாடுகளோ கண்டறிந்தால், அவற்றைச் சரிபார்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், மதிப்பீட்டில் திருப்தி ஏற்படாத பட்சத்தில், குறிப்பிட்ட சில விடைகளை மறுமதிப்பீடு செய்ய அவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டுக் கட்டணம்
மறுமதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பெறுவதற்கான கட்டணம், ஒரு பாடத்திற்கு ரூ. 100
மதிப்பெண்கள் தொடர்பான முரண்பாடுகளைச் சரிபார்ப்பதற்கான கட்டணம், ஒரு பாடத்திற்கு ரூ. 100
மறுமதிப்பீட்டுக் கட்டணம், ஒரு கேள்விக்கு ரூ. 25
CBSE Revaluation Portal Back Online: Full Details
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.