என்னக் கொடுமை? மறு மதிப்பீடு கோராத சிபிஎஸ்இ மாணவர்கள் மதிப்பெண் குறைந்து ஃபெயில் ஆன பரிதாபம்
என்னக் கொடுமை? மறு மதிப்பீடு கோராத சிபிஎஸ்இ மாணவர்களின் மதிப்பெண் குறைந்து ஃபெயில் ஆன பரிதாபம்
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு என்றாலே, பல மாணவர்களுக்கும் குளறுபடிகள்தான் நினைவுக்கு வரும் அளவுக்கு ஏகபோகமாக நடந்துவிட்டன. அதில் புதிதாக, மறு மதிப்பீடு கோராத 2 மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபரிதாபாத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், சிபிஎஸ்இ முறையில் படித்து தேர்வெழுதியிருந்த நிலையில், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னை தலைசுற்ற வைக்கிறது.
தங்களது தேர்வு முடிவுகளைப் பார்த்து, மறுமதிப்பீடு கோரிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் அதிகரித்த நிலையில், மறு மதிப்பீடு கோராத பாடங்களில் மதிப்பெண் குறைந்து, மீண்டும் தேர்வெழுத வேண்டும் என்று ரிசல்ட் வந்துள்ளது.
Advertisement
Advertisement
இதனால், அவர்களது கல்லூரி சேர்க்கை என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு மாணவர் வேதியியல், அறிவியல் பாடத்துக்கு மறுமதிப்பீடு கோரினார். வேதியியல் மதிப்பெண் 42லிருந்து 52 ஆகவும், அறிவியலில் 70 மதிப்பெண் 79 ஆகவும் உயர்ந்தது. ஆனால், இறுதியில் மதிப்பெண் பட்டியல் வந்தபோது,மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்காத கணிதத்தில் 46 மதிப்பெண் 40 ஆகக் குறைந்து மாணவர் தோல்வி என ரிசல்ட் மாறியிருக்கிறது.
மற்றொரு மாணவர் இயற்பியல், கணினி அறிவியலுக்கு மறு மதிப்பீடு கோரிய நிலையில், வேதியியல் பாடத்தின் மதிப்பெண் 52லிருந்து 43 ஆகக் குறைந்து தேர்வு முடிவே மாறிவிட்டிருக்கிறது.
இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர் சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு எதிராக புகார் பதிவு செய்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், அவர்களால் கல்லூரியில் சேர்க்கை பெற முடியாத நிலை ஏற்படும் என கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
மாணவர்களும் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாக பள்ளி சார்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.