நாளை டெசோ பொது வேலைநிறுத்தம்: பஸ்-ரயில் சேவையில் பாதிப்பிருக்காது
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தப் பாதிப்பு ஏற்படாத வகையில் போதுமான முன்னெச்சரிக்கை
திமுக அங்கம் வகிக்கும் டெசோ அழைப்பு விடுத்துள்ள பொது வேலைநிறுத்தம் நாளை (மார்ச் 12) நடைபெறுகிறது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தப் பாதிப்பு ஏற்படாத வகையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகள் ஆதரவளிக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இந்தப் போராட்டம் குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளிடம் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடததினார்.இந்தக் கூட்டத்தில், டெசோ பொது வேலை நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.டெசோ பொது வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, மாநிலம் முழுவதும் போக்குவரத்துக் கழக பஸ்களை சீரான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
போக்குவரத்துக் கழக பணியாளர்களில் பெரும்பாலானோர் ஆளும் கட்சியான அதிமுகவின் தொழிற்சங்கத்திலும், இடதுசாரிகளின் தொழிற்சங்கங்களிலும் இருப்பதால் அவர்கள் அனைவரும் பணியில் ஈடுபடுவர் எனவும், இதனால் போக்குவரத்துக் கழக பஸ்களை இயக்குவதில் எந்தச் சிரமமும் இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று, ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவு அங்கம் வகிக்கும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., போன்ற தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், ஆட்டோக்கள் அனைத்தும் இயக்கப்படும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.