17 நாட்களாக உயிர் போராட்டம் : வங்கதேச பெண் கண்ணீர் பேட்டி
வங்கதேச கட்டட விபத்தில் சிக்கி 17 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த பெண் ரேஷ்மி தனது அனுபவத்தை கண்ணீர் மல்கக் கூறினார்.
வங்கதேச கட்டட விபத்தில் சிக்கி 17 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த பெண் ரேஷ்மி தனது அனுபவத்தை கண்ணீர் மல்கக் கூறினார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் 8 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரண்டாயிருத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் இன்னமும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்டட இடிபாடுகளை அகற்றும் போது, நேற்று ரேஷ்மி என்ற பெண் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement
Advertisement
மருத்துவமனையில் இருந்தவாறு, அவர் கடந்த 17 நாட்களை எவ்வாறு கழித்தார் என்பதை கண்ணீர் மல்கக் கூறினார்.
அதில், கட்டடம் இடிந்து விழும் போது, ஒரு மிகப்பெரிய தூண் அருகே நான் நின்றிருந்தேன். தூணுக்கும், மேல்தள பீமுக்கும் இடையே நான் மாட்டிக் கொண்டதால், எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. நான் சிக்கிக் கொண்ட இடத்தின் அருகில் இருந்த காய்ந்து போன உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன். அருகில் இருந்த தண்ணீரை குடித்து வந்தேன். கடைசி இரண்டு நாட்களாக உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லாமல் பட்டினிக் கிடந்தேன். தொடர்ந்து மீட்புக் குழுவினருக்கு சத்தம் எழுப்பி வந்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் எனது முயற்சி வீணாகி வந்தது.
கடைசியாக நேற்று தான் மீட்புக் குழுவினர் என்னை கவனித்தனர். நான் உயிர் பிழைப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. மறு ஜென்மம் எடுத்தது போன்று உணர்கிறேன் என கூறியுள்ளார்.