யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!
அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது பற்றி....
அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று (ஜூன் 15) வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்கு 1,016 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 24 ஆம் தேதி நடைபெற்றது. இவற்றில் முதன்மைத் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
முதன்மைத் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு ஜுன் 2026 முதல் ஆகஸ்டு 2026 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமின்றி, குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த இதர ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் சேர்த்து ஊக்கத் தொகையாக ரூ.9,000/- வழங்கப்படும்.
இப்பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் 17.06.2026 காலை 6.00 மணி முதல் 18.06.2026 மாலை 6.00 வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்களின் விவரம் 18.06.2026 இரவு 9.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டு 20.06.2026 மற்றும் 21.06.2026 ஆகிய இரு நாள்களில் சேர்க்கை நடைபெறுவதோடு, 22.06.2026 முதல் முதன்மைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
மேலும், விண்ணப்பப் பதிவு/சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண் (Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.