முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (22.8.2013) தலைமைச் செயலகத்தில், புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 2:32 pm IST
பகிர்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (22.8.2013) தலைமைச் செயலகத்தில், புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் தற்போது 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் படிப்படியாக தொடங்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாகும்.

இதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்க 25 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு, இந்த நிலத்தில் 130 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இந்திய மருத்துவ குழும விதிகளின்படி நிறுவிட முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, 73 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு இந்திய மருத்துவக் குழும விதிகளின்படி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்குத் தேவையான நிருவாகக் கட்டடம், தொழில்முறை பணியாளர்கள் கூடம், மாணவர்கள் தங்கும் விடுதி, நூலகம் ஆகியவற்றிற்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த மருத்துவ கல்லூரிக்கு தேவையான மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமனம் செய்யும் பொருட்டு இந்திய மருத்துவ குழும விதிகளின்படி 192 நிரந்தர பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன.  மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக 16 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில்  100 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் குழுமத்தின் அனுமதி கிடைக்கப் பெற்று, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 2145 மருத்துவ இடங்கள் இருந்தன. தமிழக அரசின் நடவடிக்கையின் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கான 100 இடங்கள் உட்பட, 410 கூடுதல் மருத்துவ இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ குழுமம் தமிழக அரசுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்திற்கான மருத்துவ இடங்கள் 2555-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலையில் 73 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை இன்று முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.