ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி : முதல்வர் துவக்கி வைப்பு
தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அக்ரவால் முன்னிலையில் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அக்ரவால் முன்னிலையில் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தில் உயர் தரத்துடன் கூடிய சட்டக் கல்வி அளிப்பதற்கு ஏதுவாக 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி தேசிய சட்டப் பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேந்தராகவும், சட்டத் துறை அமைச்சர் இணை வேந்தராகவும் செயல்படுவார்கள்.
இவ்வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலூகாவிலுள்ள நவலூர் குட்டப்பட்டுவில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 4,55,658 சதுர அடி அளவில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிக்கான அடிக்கல்லை நாட்டினார் முதல்வர்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிக்கு, துணை வேந்தர் அலுவலகம், பார்வையாளர்கள் அறை, மாநாட்டு அரங்கம், ஆட்சிக்குழு அலுவலகம், ஆட்சிப் பேரவை அலுவலகம், பதிவாளர் அலுவலகம், துணை பதிவாளர் அலுவலகம், நிதி அலுவலர் அலுவலகம், தொலைதூர கல்வி இயக்குநர் அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகம் ஆகியவை கொண்ட நிருவாக வளாகம்; வங்கி, அஞ்சலகம், இலவச சட்ட உதவி மையம், தேசிய மாணவர் படை அலுவலகம், தேசிய சேவை திட்ட அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கொண்ட வளாகம்; 16 வகுப்பறைகள், 3 விரிவுரை அரங்குகள், 3 கருத்தரங்கு அரங்குங்கள், உள்ளிட்ட இளநிலை பட்டதாரி வளாகம் மற்றும் இளநிலை மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் ஆகியவைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டப் பள்ளிக்கு பயிற்சி மையம், நூலகம், முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம், தேர்வு அரங்கு, பல்நோக்கு அரங்கு, துணைவேந்தர் குடியிருப்பு, பிற குடியிருப்புகள், உள் விளையாட்டரங்கம், தடகள விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிக்கு 2013-2014ஆம் கல்வி ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியருக்கென ஒதுக்கப்பட்டுள்ள 10 இடங்களையும் சேர்த்து, 100 மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர்.
ஸ்ரீரங்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தப் புதிய தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அக்ரவால் முன்னிலையில் தமிழக முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து, 7 மாணவ, மாணவியருக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி திறப்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அக்ரவால் 5 மாணவ, மாணவியருக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். ஜெய்சந்திரன், நீதிபதி வி. தனபாலன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர், அரசு தலைமைக் கொறடா, தலைமைச் செயலாளர், அரசு தலைமை வழக்குரைஞர், சட்டத் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.