பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
தமிழக முதல்வர் இன்று தலைமைச் செயலகத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 78 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்திற்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் இன்று தலைமைச் செயலகத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 78 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்திற்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக கடலோர மாவட்டமான நாகப்பட்டினத்திலுள்ள பூம்புகார் கடற்கரையில் கடல் அலை சுழற்சியின் காரணமாக இயந்திர மீன்பிடி படகுகள் கடற்கரைக்கு அருகில் வந்து மீன்களை இறக்கவும், மீன்பிடி படகுகளுக்குத் தேவையான டீசல், பனிக்கட்டி மற்றும் இதர பொருட்களை ஏற்றி செல்லவும் இயலாத நிலை உள்ளது. இதனால் தற்போது பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு கட்டு மரங்களைப் பயன்படுத்தி மீனவர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, இச்சிரமத்தை போக்க பூம்புகாரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
பூம்புகார் பகுதி மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 1995-ஆம் ஆண்டு பூம்புகாரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவர் இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட காலத்தில் இத்திட்டம் தொடர்பாக ஆகஸ்ட் 2001-ல் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 40 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு இந்திய தொல்பொருள் ஆய்வியல் துறையின் ஒப்புதல் கிடைக்கப் பெற்ற பின்னர், பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தின் திட்ட மதிப்பீட்டிற்கு ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
அதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகாரில் 78 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று முதல்வர் அடிக்கல் நாட்டினார். பூம்புகாரில் அமைக்கப்படவுள்ள புதிய மீன்பிடி துறைமுகத்தில், அலைத் தடுப்பு சுவர், படகு அணையும் சுவர், மீன் ஏலக்கூடம், சாய்வு தளம், சாலை, கான்கிரீட் தளம், மின் வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி, தகவல் தொடர்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், இப்புதிய மீன்பிடி துறைமுகத்தினால் பூம்புகார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் தங்களது மீன்பிடித் தொழிலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில் 11 மீட்டர் நீளமுள்ள 150 இயந்திர படகுகளும், 13 மீட்டர் நீளமுள்ள 200 இயந்திரப் படகுகளும், என மொத்தம் 350 இயந்திர மீன்பிடி படகுகளையும், 350 நாட்டுப் படகுகளையும் நிறுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. இந்தப் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுவதன் மூலம் 17 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.