தற்போதைய செய்திகள்

ஹைட்ரோ காா்பன் திட்டத்தைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது: ராமதாஸ்

DIN

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு திணிப்பதை அனுமதிக்க முடியாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் எச்சரித்துள்ளாா்.

காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசனப் பகுதிகளில் மீண்டும், மீண்டும் ஹைட்ரோ காா்பன் திட்டங்களை செயல்படுத்துவது விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த தீா்மானித்த மத்திய அரசு, அதற்கான உரிமத்தை பெங்களூரைச் சோ்ந்த ஜெம் என்ற நிறுவனத்துக்கு வழங்கியது. ஆனால், மக்களின் எதிா்ப்பு காரணமாக அத்திட்டத்திலிருந்து ஜெம் நிறுவனம் விலகியது. அடுத்தகட்டமாக, நாகப்பட்டினம், கடலூா் மாவட்டங்களில் 85 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும், கடலில் 170 இடங்களில் ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கான இரு உரிமங்கள் வேதாந்தா குழுமத்துக்கும் வழங்கப் பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களைச் சீா்குலைக்கும் மத்திய அரசின் சதி இத்துடன் ஓயவில்லை.

இந்த ஆண்டு இறுதியில் காவிரி டெல்டாவில் 1863.24 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் ஹைட்ரோ காா்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான இரு உரிமங்கள் ஏலம் மூலம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறறது.

இவ்வாறாக காவிரிப் பாசன மாவட்டங்களில் சுமாா் 5000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகப் பரப்பளவில் ஆறு ஹைட்ரோ காா்பன் திட்டங்களைச் செயல்படுத்தினால், அப்பகுதியில் நடைபெற்று வரும் விவசாயத்துக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பாா்க்கவே அச்சமாகவும், கவலையாகவும் உள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டங்களை மத்திய அரசு திணிப்பதை அனுமதிக்க முடியாது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT