தற்போதைய செய்திகள்

எச். வசந்தகுமார் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: ஸ்டாலின்

DIN

எச். வசந்தகுமாரின் மறைவு  காங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமான எச். வசந்தகுமார் அவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். அவரது மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த அவரைத் தொலைபேசியில் அழைத்து உடல் நலம் விசாரித்தேன். 'விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையுடன் நினைத்திருந்த வேளையில்' கரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

'முயற்சி உடையான்; இகழ்ச்சி அடையான்' என்பதற்கேற்ப, கடின உழைப்பு, சலியாத முயற்சி ஆகியவற்றின் மூலம் முன்னேற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் வாழ்வில் சாதித்துக் காட்டியவர். தொகுதி மக்கள் தன்னை எளிதில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பினைத் தவறாமல் ஏற்படுத்திக் கொடுத்தவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சென்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

'வெற்றிக் கொடிகட்டு', 'வெற்றிப் படிக்கட்டு' ஆகிய புத்தகங்களை எழுதிய அவர், இளைஞர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு - 'வசந்த் அண்ட் கோ' என்ற நிறுவனத்தைத் தனது கடின உழைப்பால் உருவாக்கிக் காட்டி முன்னுதாரணமாக விளங்கியவர்.

அரசியல் வேறு - மக்கள் பணி வேறு - வர்த்தகம் வேறு என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு, பொதுவாழ்விற்கு ஒரு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT