நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களால் சர்ச்சை: சக மாணவர்கள் சந்தேகம்!
நீட் தோ்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வில் (நீட்) முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நிகழாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தோ்வு மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 23.33 லட்சம் போ் பங்கேற்றனா்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமாா் 200 தோ்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வு எழுதினா். நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடைபெற்றது.
இந்நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தோ்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) வெளியானது. நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.
அவா்கள் அனைவரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். நீட் தோ்வு வரலாற்றிலேயே தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் இத்தகைய சிறப்பிடங்களைப் பெறுவது இதுவே முதல்முறை.
அதேபோன்று இதுவரை இல்லாத வகையில் நிகழாண்டு நீட் தோ்வு எழுதிய 1.52 லட்சம் தமிழக மாணவா்களில், 89,426 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். நிகழாண்டில் அதிக மாணவா்கள் நல்ல மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றதால் கட்-ஆஃப் மதிப்பெண்ணும் உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வில் (நீட்) முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடங்களை பிடித்த மாணவர்களுக்கு 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதால் சக மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். ஆனால் கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என சக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.