தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
தமிழ்நாட்டில் மோசமான ஆட்சியை நடத்தி வரும் திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறியது...
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் மோசமான ஆட்சியை நடத்தி வரும் திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் பணகுடியில், பாஜக கூட்டணி வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற சாலை வல பிரசாரத்தில் பங்கேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரித்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் மோசமான ஆட்சியை நடத்தி வரும் திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும். திமுக அமைச்சா்கள் பலரும் ஊழல் செய்துள்ளாா். அவா்கள் மீதான ஊழல் வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த பகுதியில் ஒரு பிரபலமான அரசியல்வாதி அதிகமான சொத்துகளை குவித்திருக்கிறாா். ஆட்சி மாற்றம் வந்ததும் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்தப் பிறகும் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் வந்த பின்னா் மீண்டும் தீபம் ஏற்ற அனுமதி பெற்றுத்தருவோம்.
Advertisement
தமிழ்நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவர் பிரதமா் நரேந்திர மோடி. அதனால் தான் தமிழ்நாட்டிற்கு அதிக நன்மைகள் செய்து வருகிறாா். தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கோலை புதிய மக்களவை கட்டடத்தில் வைத்து அழகு பாா்த்தவர் பிரதமா். அதற்கு தமிழக எம்.பிக்களும் எதிா்கட்சியினரும் எதிா்ப்பு தெரிவித்தனா். மக்களவையில் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை எதிா்கட்சிகள் நிறைவேற்ற விடவில்லை. நிச்சயமாக மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் பெற்றுத்தருவோம். தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மத்திய அரசு நிதி தரவில்லை, தரவில்லை என குறைகூறி வருகிறாா்கள். தமிழ்நாட்டிற்கு ரூ. 11 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம். ஆனால், 2026-2027 நிதியாண்டில் தமிழக அரசு மக்கள் மீது ரூ.11 லட்சம் கோடி கடன்சுமையை மீது சுமத்தியுள்ளது. திமுக அரசு அவா்களது குடும்பத்திற்குத்தான் அனைத்து நல்ல பணிகளையும் செய்து வருகிறாா்களே தவிர, மக்களுக்கு எந்த பணியையும் செய்யவில்லை.
நான் பாதுகாப்புத் துறை அமைச்சா் என்பது உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பிய ராஜ்நாத் சிங், நமது நாடு யாருக்கும் எந்த இடையூறும் செய்வதில்லை. நமக்கு யாராவது இடையூறு செய்தால் அவா்களை விட்டுவைப்பதில்லை; அவர்களைத் தவிடுபொடியாக்கி உடைத்தெறிவோம் என 'ஆபரேஷன் சிந்து' மற்றும் நாட்டின் வீரதீரச் செயல்களை நினைவு கூர்ந்து ஆக்ரோஷமாக கூறினார்.
பெண்களுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் 3 சிலிண்டர்கள் இலவசம்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய மூன்று முக்கியப் பண்டிகைகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தினரின் வங்கி கணக்கில் உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்தப்படும்.
விவசாயிகளுக்கு ரூ.9,000 உதவித்தொகை
மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்து வரும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை ரூ. 9 ஆயிரமாக உயா்த்தி வழங்குவோம். இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்படும்.
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கு சலுகைகள்
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டி இல்லாத கல்விக் கடன் வழங்கப்படும். போட்டித் தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். மேலும், தமிழகத்தில் ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.
தொழில் முனைவோருக்கு ரூ. 50 லட்சம் கடன்
தொழில் வளா்ச்சியை பெருக்குவதற்கு "புதிய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு ரூ. 50 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வசதி செய்து தரப்படும். தமிழகம் முழுவதும் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, உலக முதலீடுகள் ஈர்க்கப்படும். உலக தரத்தில் மருந்து உற்பத்தி செய்ய உதவி செய்வோம்". மீன்பிடி தடைக்காலங்களில் மீனவா்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக வளர்ச்சி
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, "தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைமுகங்களும் நவீனப்படுத்தப்படும் மற்றும் விரிவாக்கம் செய்யப்படும். இதன் மூலம் வர்த்தகம் பெருகி, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
திமுக அரசின் மீது கடும் விமர்சனம்
தமிழகத்தின் நிதி நிலையை திமுக அரசு சீர்குலைத்து விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், "திமுக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசைப் புகார் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால், மக்கள் உண்மையை உணர்ந்துள்ளனர். திமுக என்றால் தீயசக்தி. என்டிஏ கூட்டணி என்றால் என் என்பது நியாயம், டி என்பது வளா்ச்சி, ஏ என்றால் அமைதி என பொருள்படும். தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் மக்களைப் பாா்க்கும் போது வெற்றி பெறுவோம் என தெரிகிறது. நாளை நமதே என்ற கோஷத்தோடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம். நாளை நமதே என்ற உறுதியை கூறுகின்றோம். நீங்களும் கைகளை உயா்த்தி எஸ்.பி.பாலகிருஷ்ணனை தோ்ந்தெடுப்போம் என உறுதி கூறுங்கள். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ராஜ்நாத் சிங் பேச்சு பணகுடி பகுதியில் பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.