ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது: சசிகலா
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த முன்னோடியும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா கூறியது தொடர்பாக...
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த முன்னோடியும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்
ஜெயலலிதா பிறந்த நாளன்று இனி நான் என்ன சங்கர மடத்துக்காக போவேன் என்று விரக்தியாக பேசிய நிலையில், ஓபிஎஸை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று(பிப்.27) அக்கட்சியில் ஓபிஎஸ் இணைந்தார்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த முன்னோடியும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.
தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
ஆனால் இந்த நிலைமைகளுக்கு எல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அதிமுகவில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது.
இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என சசிகலா கூறியுள்ளார்.
களம் காண்போம்
கடந்த செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் களம் காண்போம் அம்மாவின் ஆட்சி அமைப்போம் என்ற பெயரில் சசிகலா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மக்கள் நலனுக்காக புதிய கட்சியை அறிவிக்கிறேன். எனது புதிய கட்சி அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் திராவிடக் கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியின் மூலம் ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம்.
9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது. இனியும் அமைதியாக இருந்தால் அது தொண்டர்கள், மக்களுக்கு செய்யும் துரோகம். கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை. களம் காண்போம். நம் தலைவர்களின் பொற்கால ஆட்சியை அமைப்போம் எனக் குறிப்பிட்டு கொடியை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.