கலைஞர் பிறந்த நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
முன்னாள் முதல்வர், மறைந்த கருணாநிதியின் 103 -ஆவது பிறந்த நாளையொட்டி புதன்கிழமை (ஜூன் 3) அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது தொடர்பாக...
முன்னாள் முதல்வர், மறைந்த கருணாநிதியின் 103 -ஆவது பிறந்த நாளையொட்டி புதன்கிழமை (ஜூன் 3) அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழித்தோன்றலாக திமுக எனும் பேரியக்கத்தை சுமார் 50 ஆண்டுகாலம் கட்டிக்காத்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103 ஆவது பிறந்தநாள் புதன்கிழமை (ஜூன் 3) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 8 மணியளவில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் எதிரிக்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து சென்னை, அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு, திருவுருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு கீழ் உள்ள திருவுருவப்படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் 75 அடிய உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றி வைத்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தழிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்.