வேளாண் பொருட்களுக்கு மாநில அரசுகள் கூடுதல் விலை வழங்கக் கூடாது: மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
வேளாண் பொருட்களுக்கு, மத்திய அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக மாநில அரசுகள் வழங்கக் கூடாது என்ற மத்திய அரசு உத்தரவுக்கான கண்டனம் குறித்து...
விவசாயிகள் விளைவித்த வேளாண் பொருட்களுக்கு, மத்திய அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக மாநில அரசுகள் வழங்கக் கூடாது என்ற மத்திய அரசு உத்தரவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளதாவது:
கேரளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஜன. 9 கேட்டிருந்த கேள்விக்கு, மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் இந்த தகவலை எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளது.
Advertisement
Advertisement
கேரளம் மாநில அரசு விளைப் பொருள்களின் கொள்முதலில் ஊக்கத்தொகை கொடுப்பதால் எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது....இதை மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளதா..... நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பிற்கு மத்திய அரசின் மாற்று ஏற்பாடு உண்டா... இந்த உத்தரவு கேரளம் மாநிலத்திற்கு மட்டும் தானா ..?... என்ற 5. கேள்விகளை கேட்டிருந்தார்.
இதற்கு மார்ச் 13 ஆம் தேதி மத்திய நிதித்துறை அமைச்சகம் இந்த 5 கேள்விகளுக்கான பதிலை அளித்துள்ளது.
ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்த வேண்டும்
அதாவது, விவசாய விளைப் பொருட்களின் அரசு கொள்முதலில் மத்திய அரசின் எம்.எஸ்.பி க்கு மேலாக எவ்வித கூடுதல் தொகையையும் அளிக்க கூடாது என முன்னரே பல்வேறு தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது..... ஊக்கத்தொகையினை இனி வழங்குவதை நிறுத்திட மாநில அரசுகள் பரீசிலிக்க வேண்டும்....கேரளத்தில் வழங்கப்படுகிற ஊக்கத்தொகையை நாங்கள் ஏற்கவில்லை.... நாடு முழுவதும் 22 வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணைத்துள்ளது. இதற்கு மேலாக கொடுப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை..... மேலும் ஊக்கத்தொகை அல்லது வேறு எந்த பெயராலும் கொடுக்கப்படுவதை முற்றாக நிறுத்தப்படுவதற்கான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பதிலளித்துள்ளது.
ஒரே மாதிரியான உற்பத்தி செலவு இல்லை
பாஜக ஆட்சிக்கு வந்த காலம் முதலே இதில் கெடுபிடிகள் செய்து வருவதை எதிர்த்து வருகிறோம். இது நியாயமான செயல் அல்ல. மத்திய அரசு வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிற முறையே சரியில்லை. நாடு முழுதும் ஒரே மாதிரியான உற்பத்தி செலவு இல்லை.
மாவட்டத்திற்கு மாவட்டம், மாநிலத்துக்கிடையே வேறுபாடு உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் விலையை பற்றி ஆய்வு செய்கிற பொழுது... பொருத்தமான விவசாயிகளையோ,, மாவட்ட மாநில அளவிலான உற்பத்தி செலவு வேறுபாடுகளையோ முழுமையாக கணக்கிடுவது இல்லை. கடந்த ஆண்டை விட சில சதம் கூடுதலாக சி.ஏ.சி.பி.. பரிந்துரை செய்வதும்.... மத்திய அமைச்சரவை கூடி அதிலும் குறைத்து அறிவிப்பதுமே வாடிக்கையாக உள்ளது.
ஏமாற்று வேலை
மேலும் இதை அறிந்துதான் எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான வேளாண் கமிஷன் விலை நிர்ணயத்திற்கான புதிய வழிகாட்டலை கொடுத்தது. இதன் அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்கிறோம் என்பது ஏமாற்று வேலை.
உற்பத்தி செலவு என்பது இரு வகைப்படும். உற்பத்திக்கான அனைத்து வகை செலவு.... இதன், முதலீட்டு செலவுக்கான வட்டி மேலும் சாகுபடி பாதுகாப்பு பராமரிப்பு மேற்கொள்ளும் குடும்ப வாழ்க்கை செலவு என இரண்டையும் கூடுதல் செய்து, இத்துடன் 50 சதம் தொகை சேர்த்து தான் விலை நிரணயம் செய்ய வேண்டுமென பரிந்துரை செய்ததை மறுத்து, உற்பத்திக்கான செலவில் ஒரு பகுதியை மட்டும் கணக்கிட்டு... இத்துடன் 50 சதம் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் விலையாக அறிவித்து விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் தான் நாடு முழுதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் அடாவடித்தனம்
ஆகவே தான் நேரடியாக அந்தந்த மாநிலங்களில் இருக்கிற இடர்பாடுகளை புரிந்து மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்பதால் தான், ஊக்கத்தொகை அல்லது இடைநிகழ் செலவு என்பதின் பேராலே விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடாக கொடுக்கிறது. இதனால் தான் வேளாண் மகசூல் அதிகரித்து கொண்டிருக்கிறது.
ஆகவே விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு கருணையின் அடிப்படையிலேயே மாநில அரசுகள் கொடுத்து வரும் ஊக்கத் தொகையை தடுப்பது என்பது மத்திய அரசின் அடாவடித்தனமாகும். சொல்லப் போனால் வேளாண்மை என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. குறைந்தபட்சம் மாநில அரசுகளை கலந்து பேசாமலே இப்படியான நடவடிக்கைகளை எடுப்பது விவசாயிகளை காக்கும் போக்கும் அல்ல.. பொருத்தமானதுமல்ல.
விவசாயிகளை பாதுகாப்பது முக்கியம்
தற்போது மாநில அரசுகளும் சேர்த்து கொடுக்கிற விலை என்பதும் விவசாயிகளுக்கு கட்டுப்படியானது அல்ல. நுகர்வோர்களை பாதுகாப்பது முக்கியம்... விவசாயிகளை பாதுகாப்பது அதைவிட முக்கியம். வேளாண் கமிஷன் ஆணையம் அறிவுறுத்திய படி விலை நிர்ணயம் செய்து அமல்படுத்தினால் மாநில அரசுகளின் ஈட்டு உதவித்தொகையை தவிர்க்கலாம். அதுவரை ஏற்படும் இடைநிலை துயரை பொறுப்பேற்று ஈடு செய்து உரிய விலையை கொடுப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளாகத்தான் இருக்க வேண்டும்.
இதை உணராமல் மத்திய அரசு மாநில அரசுகள் வழங்கும் குறைந்தபட்ச பாதுகாப்பை கூட தடை படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.
State governments should not pay additional prices for agricultural products: Farmers' Association condemns the Central Government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.