புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையொப்பம்!
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக...
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று(மார்ச் 23) கையொப்பமானது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியை உறுதி செய்திருந்தாலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். என்றாலும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்து இறுதி முடிவை அறிவிக்க இந்த இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை. இரு கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்திக்க விரும்புகின்றன. ஆனால், தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில்தான் பிரச்னை நீடித்தது.
இதனால், இரண்டு கட்சிகளின் தலைமையும் தலையிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் தொகுதிப் பங்கீட்டை முடிக்க உத்தரவிட்டன. இதனால், காங்கிரஸ் - திமுக இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவை கடந்தும் நீடித்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையொப்பமானது.
காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், திமுக 12 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 தொகுதியில் போட்டியிட உள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் என். ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 14 தொகுதிகளும் என உடன்பாடு ஏற்பட்டது.
தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 2, லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 2 என்று தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. இதில், 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துவிட்டது. அதிமுகவும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.