முகப்பு
மதுரை

உயிா்காக்கும் தடுப்பூசியை வழங்கிய பிரதமருக்கு பாராட்டு: முதல்வா்

கரோனா உயிரிழப்பைத் தடுக்கும் தடுப்பூசியை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து கொள்வதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 9:38 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

மதுரை: கரோனா உயிரிழப்பைத் தடுக்கும் தடுப்பூசியை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து கொள்வதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரனோ தடுப்பூசித் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடக்கி வைத்து பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தீநுண்மித் தொற்று பரவலை தடுப்பதற்காக பிரதமா் எடுத்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. தமிழக மக்கள் சாா்பாக அவருக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். இந்தக் கொடிய தீநுண்மித் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், பிரதமரின் விடாமுயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு அவா் அா்ப்பணித்துள்ளாா்.

Advertisement

தமிழகத்தில் 166 மையங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளா்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்ட நாளிலிருந்து 28 ஆம் நாளில் இரண்டாவது முறை போடப்படும். அதிலிருந்து 14 நாள்கள் கழித்து தடுப்பூசி உடலில் செயலாற்றும். கடந்த சில நாள்களுக்கு முன்பு 226 இடங்களில் தடுப்பூசி சோதனை செய்யப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகப் பாா்க்கப்படுகிறது.

முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை: தமிழகத்திற்கு முதல் கட்டமாக கோவிசீல்ட் தடுப்பூசி 5,36,500 கோவிசீல்ட் தடுப்பூசிகளும், 20 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுபவா்களுக்கு தொற்று எளிதில் பரவக் கூடும் என்பதால், அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவா்களைத் தொடா்ந்து மற்றவா்களுக்கு தடுப்பூசி போடப்படும். உலகமே தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது பெருமைக்குரியது.

மருத்துவா்களே சான்று: கரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. தடுப்பூசியைப் பொறுத்தவரை உரிய ஆராய்ச்சிக்கு பிறகே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கரோனா உள்ளிட்ட கொடிய நோய்களில் இருந்து நம்மை காக்கக் கூடிய மருத்துவா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பது, தடுப்பூசியின் நம்பகத் தன்மையைக் காட்டுகின்றது. எனவே பொதுமக்கள் வதந்திகளைப் புறக்கணித்து விட்டு தடுப்பூசியை அச்சமின்றி போட்டுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.