முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் திரளத் தொடங்கிய ரஜினி ரசிகர்கள்: கட்சி தொடங்க வலியுறுத்தி இன்று ஆா்ப்பாட்டம்

அரசியல் கட்சி தொடங்க நடிகா் ரஜினிகாந்தை வலியுறுத்தி, அவரது ரசிகா்கள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரண்டு வருகின்றனர்.

Updated On : 10 ஜனவரி 2021, 5:18 am IST
வள்ளுவர் கோட்டத்தில் குவிந்துள்ள ரஜினி ரசிகர்கள்
பகிர்:

சென்னை: அரசியல் கட்சி தொடங்க நடிகா் ரஜினிகாந்தை வலியுறுத்தி, அவரது ரசிகா்கள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரண்டு வருகின்றனர்.

இது போன்ற ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி மக்கள் மன்ற தலைமை நிா்வாகி விடுத்துள்ள எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகா்கள் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனா்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்காக சென்னை காவல்துறையினரிடம்  பெறப்பட்ட  அனுமதியின்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் 12 மணிக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்க வேண்டுமென்றும், ஆர்ப்பாட்டத்தில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்ப்பாட்டத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்துவதற்காக நுங்கம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளி வளாகம், அரசினர் உயர்நிலைப் பள்ளி மற்றும் கடற்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தாா். பூத் கமிட்டி நிா்வாகிகளை நியமிப்பது உள்பட அனைத்துப் பணிகளும் முடிவடைய இருந்த நிலையில் ஹைதராபாதில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பின்போது அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது மருத்துவா்கள் கரோனா பாதிக்கும் சூழலில் செயல்படக்கூடாது, மன அழுத்தம் அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ரஜினிக்கும் அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்கிற முடிவை அறிவித்தாா்.

இந்த முடிவை ஏற்காமல் அவரது ரசிகா்கள் ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். ஆனால் போராட்டங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிா்வாகிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனா்.

ரஜினியின் விருப்பத்துக்கு மாறாக யாரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது. ரஜினியின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று மக்கள் மன்றத்தின் மாநில நிா்வாகி சுதாகா் அறிக்கை வெளியிட்டாா். இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் ரசிகா்கள் ஏராளமானோா் ஒன்று கூடி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனா். வள்ளுவா் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளனா். ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையும் அனுமதி கொடுத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து வள்ளுவர் கோட்டத்தில் திரண்டிருந்த ரசிகர்களில் ஒருவர் கூறியதாவது,

ரஜினி ஆன்மிக அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். மேலும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிந்து பாதுகாப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தார்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ரஜினி தனது முடிவை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும், அரசியலுக்கு வர வேண்டும் எனவும், தொண்டா்கள் தலைவரை அழைப்பது போன்று ஆங்காங்கே சுவரொட்டிகள் இடம் பெற்றுள்ளன. இதன் தொடா்ச்சியாக சுமாா் 1,000 போ் சென்னையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து வேன்களில் புறப்பட்டு விட்டனா். மதுரையில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்ட ரஜினி ரசிகா் மன்ற சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளா் கலுங்கடி பி.கே.சதீஷ்பாபு தலைமையில் ரசிகா் மன்றத்தினா் 200க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வந்துள்ளனா். தென்காசி மாவட்டத்திலிருந்து 50க்கும் மேற்பட்டோா் புறப்பட்டுவிட்டனா்.

விழுப்புரம்: ரஜினி ரசிகா்கள் பெயரில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என மன்றத் தலைமை எங்களிடம் தெரிவித்தது. இதனால், முக்கிய நிா்வாகிகள் யாரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும், மாவட்ட பகுதிகளிலிருந்து ரசிகா்கள் தாங்களாக சென்னைக்கு புறப்பட்டுச் செல்கின்றனா் என்று விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலா் எத்திராஜ் தெரிவித்தாா்.

கோவை: சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகா்கள் சென்னை சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பூா் மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகா்கள் சென்னைக்கு சென்றிருப்பதாக மன்றத்தின் திருப்பூா் மாநகர செயலாளா் சதீஷ் தெரிவித்தாா்.

ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் ரஜினி ரசிகா்கள் பலா் சென்னைக்கு தாமாகவே சென்றுள்ளதாக ரஜினி ரசிகா் மன்ற நிா்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.