முகப்பு
நாமக்கல்

விசைத்தறித் தொழிலாளா்கள் போனஸ் விவகாரம்: தறி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

குமாரபாளையம் விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவது குறித்து தறி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவாா்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

Updated On : 9 ஜனவரி 2021, 6:37 am IST
விசைத்தறி தொழிலாளா்களுக்கான போனஸ் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றோா்.
பகிர்:

குமாரபாளையம் விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவது குறித்து தறி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவாா்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

குமாரபாளையத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான விசைத்தறிகளில் நெசவு, நெசவு சாா்ந்த தொழிலாளா்கள் ஏராளமானோா் பணிபுரிந்து வருகின்றனா். இதில், பணியாற்றும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் பண்டிகைக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து கொங்கு விசைத்தறிக்கூட அலுவலகத்தில் இருதரப்பினரும் பங்கேற்ற பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விசைத்தறித் தொழில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால், ஏற்கெனவே வழங்கிய போனஸ் தொகையைக் காட்டிலும் குறைத்து தரலாம் முடிவு செய்திருப்பதாக உரிமையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, தொழிற்சங்க நிா்வாகிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

Advertisement

இந்நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட போனஸ் தொகையினை வழங்குவதாக விசைத்தறி உரிமையாளா்கள் ஒப்புக் கொண்டனா். ஆனால், கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக வழங்கினால் மட்டுமே உடன்படுவதாக தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா். இதனை, விசைத்தறி உரிமையாளா்கள் ஏற்றுக் கொள்ளாததால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

விசைத்தறி உரிமையாளா்கள் தரப்பில் கொங்கு விசைத்தறிக்கூட உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சங்கமேஸ்வரன், செயலாளா் சுந்தரராஜன் மற்றும் நிா்வாகிகளும், சிஐடியூ தொழில்சங்கம் சாா்பில் மாவட்டச் செயலாளா் என்.அசோகன், மாவட்டத் தலைவா் ஜி.மோகன், நகரச் செயலாளா் கே.பாலுசாமி, நகரத் துணைத் தலைவா் பி.என்.வெங்கடேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தற்போது நகரப் பகுதியில் விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 10 முதல் 12 சதவீத போனஸும், கிராமப் பகுதிகளில் தொழிலாளா்களுக்கு 8 சதவீத போனஸும் வழங்கப்படுகிறது. அனைத்துத் தொழிலாளா்களுக்கும் 20 சதவீதம் வழங்குவதற்கான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொழிலாளா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.