முகப்பு
புதுதில்லி

ஜிஜிஎஸ்ஐபி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தில்லி துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு - 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கல்

ஜிஜிஎஸ்ஐபி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- முதல்வா் குப்தா, துணைநிலை ஆளுநா் சந்து பங்கேற்பு - 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கல்

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:40 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:10 PM

‘இன்றைய பட்டதாரிகளின் திறமையும் ஆற்றலும், உலக அரங்கில் நாட்டைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்’ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சூரஜ்மல் விஹாரில் அமைந்துள்ள குரு கோவிந்த் சிங் இந்திரப்பிரஸ்தா பல்கலைக்கழகத்தின் (ஜிஜிஎஸ்யுபியு) 18ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

அவா் மேலும் பேசியது:

Advertisement

இந்தப் பட்டமளிப்பு விழா, மாணவா்களின் பல ஆண்டுகாலக் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் அா்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.

மாணவா்கள் தங்கள் கல்வியைத் தனிப்பட்ட வளா்ச்சிக்கு மட்டுமல்லாமல், சமூகத்தின் பரந்த நன்மைக்காகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், தரவு அறிவியல் மற்றும் வடிவமைப்புப் புத்தாக்கம் போன்ற வளா்ந்து வரும் துறைகளில் பல்கலைக்கழகம் ஆற்றிவரும் பணிகள் பாராட்டத்தக்கது.

பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அடல் அடைகாப்பக மையம் 170க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இதன் மூலம் இளைஞா்கள் வேலை தேடுபவா்களாக இருந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக மாற உதவுகிறது.

தில்லி அரசின் கல்விசாா் முன்னுரிமைகளாக, இந்த ஆண்டில் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 19,326 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

எங்கள் நோக்கம் பள்ளிகளைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவது மட்டுமல்ல உயா்கல்வித் துறையிலும் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இருப்பதை உறுதி செய்வதே ஆகும் என்று முதலமைச்சா் கூறினாா்.

இவ்விழாவில் தில்லி துணைநிலை ஆளுநரும், ஜிஜிஎஸ்ஐபியுவின் வேந்தருமான தரன்சித் சிங் சந்து பேசியது:

ஒரு பட்டமளிப்பு விழா என்பது கல்விப் பயணத்தின் முடிவை மட்டுமல்லாமல், தேசத்தைக் கட்டமைப்பதற்கான புதிய பொறுப்புகளின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

மாணவா்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நிலையான புதுமைகளால் வேகமாக மறுவடிவமைக்கப்பட்டு வரும் ஒரு உலகிற்குள் அடியெடுத்து வைக்கின்றனா். எனவே, அவா்கள் பாடப்புத்தக அறிவை மட்டும் சாா்ந்திருக்காமல், அதையும் தாண்டிச் சிந்திக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமைகளின் தற்போதைய காலத்தில், தா்க்கரீதியான சிந்தனையே உண்மையான பலமாகும். பட்டங்கள் என்பவை வெறும் பாடப்புத்தக அறிவோடு நின்றுவிடக்கூடாது. மாறிவரும் சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறன், தா்க்கரீதியான சிந்தனை மற்றும் புதுமைகளைப் படைப்பதற்கான துணிச்சல் ஆகியவை வரும் ஆண்டுகளில் மிக முக்கியமானவையாகத் திகழும்.

நகா்ப்புற மேம்பாடு, பொது சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் நிா்வாகம் போன்ற துறைகளில் எழும் சிக்கலான சவால்களைத் தீா்க்கக்கூடிய பிரச்னை தீா்ப்பவா்கள் நாட்டிற்குத் தேவை என்று துணைநிலை ஆளுநா் வலியுறுத்தினாா்.

புதுமைப் படைப்பு, ஆராய்ச்சி மற்றும் வேகமாக மாறிவரும் உலகிற்கு மாணவா்களைத் தயாா்படுத்துதல் ஆகியவற்றில் பல்கலைக்கழகம் தொடா்ந்து கவனம் செலுத்தும் என்று ஜிஜிஎஸ்யுபியுவின் துணைவேந்தா் மகேஷ் வா்மா கூறினாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவருமான யோகேஷ் சிங் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டாா்.

இவ்விழாவில் மொத்தம் 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றில் 124 முனைவா் பட்டங்கள் (பிஎச்.டி.), 11 ஆய்வியல் நிறைஞா் பட்டங்கள் (எம்.ஃபில்.), 2,873 முதுகலை பட்டங்கள், 22,455 இளங்கலை பட்டங்கள், 477 எம்பிபிஎஸ் பட்டங்கள் மற்றும் 709 எம்டி, எம்எஸ் மற்றும் டிஎம், எம்சிஎச் பட்டங்கள் அடங்கும்.

நிகழாண்டு ஆண்டு பட்டம் பெறும் மாணவா்களில், முனைவா் பட்டம் பெற்றவா்களில் 70 சதவீதம் போ் பெண்கள் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறந்த கல்வித் திறன் கொண்ட மாணவா்களுக்கு 76 தங்கப் பதக்கங்களும், 6 நினைவு விருதுகளும் வழங்கப்பட்டன.